நகைக்கடன் தள்ளுபடித் தொகையை அரசு முன்கூட்டியே கூடடுறவு சொசைட்டிகளுக்கு வழங்காவிட்டால், நகைகளை திரும்ப வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என கூட்டுறவு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'நகைக்கடன் தள்ளுபடிக்கு முன்பாக கூட்டுறவு சொசைட்டிகளில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைக்கடனுக்கானத் தொகையை அரசு முன்கூட்டியே தராவிட்டால் சொசைட்டி சாவியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்'' என மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தணிக்கை குழுத் தலைவர் ஆசிரியதேவன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் அடகு வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை ஸ்டாலின் அரசு நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தள்ளுபடித் தொகையை அரசு முன்கூட்டியேச் செலுத்தாவிட்டால், நகைக்கடனைத் தள்ளுபடி செய்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்து ஆசிரியதேவன் கூறியதாவது:
பொதுமக்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்த தொகையை அரசு முதலில் சொசைட்டிகளுக்கு வழங்க வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து சொசைட்டிகளும் வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் பெற்று அந்த பணத்தில் நகைக்கடன் வழங்குகின்றன.
தற்போது அரசு உத்தரவிட்டதற்கு ஏற்ப 5 பவுனுக்கு கீழ் அடகு வைத்தவர்களுக்கு நகையை வழங்கி விட்டால் சொசைட்டிக்கு வருமானம் நின்று விடும். நகைக்கடன் வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் தான் சொசைட்டிகளுக்கு லாபம் தருகின்றன. எனவே டெபாசிட்தாரர்களின் முதிர்வுத் தொகையை சொசைட்டி எப்படி திருப்பி செலுத்த முடியும். சொசைட்டிகளுக்கு 30.11.2021 வரையான நகைக்கடனுக்கு வட்டி தருவோம் என அரசு தெரிவித்துள்ளது. அதன் பிறகான வட்டியைப் பற்றி எந்த உறுதியும் சொல்லவில்லை.
அரசு நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்த நாளில் இருந்தே பொதுமக்கள் அடகு நகைக்கான வட்டியை கட்டவில்லை. நோட்டீஸ் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பணியாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கமுடியாமல் திண்டாடுகிறோம். எனவே அரசு முதலில் நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையை செலுத்த வேண்டும்.
போராட்ட அறிவிப்பு
அதன் பின்பே தள்ளுபடி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கும் கூட்டுறவுத் துறைக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் புறக்கணித்து வருகிறோம். தீர்வு கிடைக்காவிட்டால் மார்ச் 7 ல் கடன் சொசைட்டிகள் மற்றும் ரேஷன் கடைகளின் சாவிகளை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
Share your comments