லாஸ் வேகாஸில் நடைப்பெற்ற CES 2024-நிகழ்வில் தானியங்கு முறையில் துல்லியமான பருத்தி நடவு, அறுவடை மற்றும் பருத்தி ஜின் பிரித்தெடுத்தல் உட்பட மொத்த பேக்கேஜிங் என அனைத்தையும் மேற்கொள்ளும் பருத்தி அறுவடைக்கான உயர் தொழில்நுட்ப இயந்திரத்தை ஜான் டீரே (John Deere) காட்சிப்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜான் டீரே, ஒரு முன்னணி விவசாய இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமாகும். CES 2024 நிகழ்வில் பருத்தி அறுவடை மற்றும் சாலை வசதி மேம்படுத்தும் தொழில்நுட்பத்தில் அதன் சமீபத்திய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தது. பருத்தி அறுவடை இயந்திரத்தை பயன்படுத்திய விவசாயிகளும் தங்களது அனுபவத்தை பார்வையாளர்களிடம் தெரிவித்தனர்.
4 மைல் வேகத்தில் நகரும் வாகனம்:
ஒரு பெரிய பருத்தி எடுக்கும் இயந்திரம் 4 மைல் வேகத்தில் வயலில் நகர்ந்து, தண்டுகளில் இருந்து பருத்தியை அகற்றி, 5,000 ஆர்பிஎம் வேகத்தில் இயங்கும் சுழலும் டிரம்களில் செலுத்துகிறது. அங்கு பருத்திகள் தனியாக பிரிக்கப்பட்டு சந்தைக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் பெரிய உருளை போன்று சேகரிக்கிறது. பின்னர் அதுவே பேக்கேஜிங்க் செய்து, இயந்திர வாகனத்தின் பின்புறம் வழியாக நிலத்தில் விழும் வகையில் கீழே தள்ளுகிறது.
அறுவடை செய்யப்பட்ட பருத்தி, ஆடை உற்பத்தியில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பதப்படுத்துவதற்காக பருத்தி ஜின்க்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்த கண்டுபிடிப்பு அதற்கான நேரத்தையும் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜான் டீரே இயந்திரமானது, பருத்தி அறுவடை செயல்முறையை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல், ஜவுளித் தொழிலின் விநியோகச் சங்கிலியிலும் பங்களிக்கும் என அதன் வடிவமைப்பாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் அனுபவம்:
அலபாமாவின் டேனரில் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும், விவசாயி பில் பிரிட்ஜ்ஃபோர்த் மற்றும் அவரது மகன் கைல் பிரிட்ஜ்ஃபோர்த் ஆகியோர் தங்களுக்குச் சொந்தமான 10,000 ஏக்கர் பண்ணையில் ஜான் டீரே இயந்திரத்துடன் பணிபுரிந்து பயனடைந்துள்ளதை விவரித்தனர். அவர்களது பண்ணையில் மூன்றில் ஒரு பங்கு பருத்திக்காகவும், எஞ்சிய பகுதி கோதுமை, சோயாபீன்ஸ் மற்றும் சோளத்துக்கும் ஒதுக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
பில் பிரிட்ஜ்ஃபோர்த் தெரிவிக்கையில், “ நான் சிறு வயதில் கைகளால் பருத்திகளை பறித்துள்ளேன். அது மிகவும் சவாலான பணி. தற்போது தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய டீரே இயந்திரங்கள் மூலம் பருத்தியை பிரித்தெடுத்து பேக்கேஜிங் மேற்கொள்வது வரை எளிதாக மாறியுள்ளது. இதன் மூலம் செலவுகள் குறைந்துள்ளது, உற்பத்தியும் அதிகரித்துள்ளது” என்றார்.
ஒரு ஏக்கரின் ஒரு பகுதி வரை பருத்தி எவ்வளவு அறுவடை செய்யப்பட்டது என்பதை விவசாயிகளுக்கு, டீரே RFID கண்காணிப்பு மூலம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிகழ்வில், டீரே டோசர் 360 என்கிற இயந்திரமும் காட்சிப்படுத்தப்பட்டது. இது சாலைகளை செப்பனிடுவதற்கு முன் தரப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன இயந்திரமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
சோலார் மாவு மில் தயாரிப்புக்கு காப்புரிமை- அசத்தும் சக்தி பம்ப்ஸ்
அரசின் பசுமை சாம்பியன் விருது- விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு!
Share your comments