ஆனைமலை தாலுகா பகுதியில், ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க, நெல் வயலில் 'ட்ரோன்' பயன்படுத்தி களைக்கொல்லி தெளிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் விவசாயத்துக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய வேளாண் கருவிகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் பொறியியல் துறை சார்பிலும், பல நவீன கருவிகள் வாங்கப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.
ஆனைமலை விவசாயிகள், நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரம் பயன்படுத்தி நடவு செய்து, களைகள் அகற்றி, அறுவடை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் களைக்கொல்லி தெளிக்க, 'ட்ரோன்' பயன்படுத்தியது இல்லை.
ட்ரோன் பயன்பாடு (Drones Usage)
ஆனைமலை தாலுகாவில் முதல்முறையாக, விவசாயி பட்டீஸ்வரன் வயலில், 'ட்ரோன்' வாயிலாக களைக்கொல்லி தெளிக்கப்பட்டது. விவசாயி பட்டீஸ்வரன் கூறியதாவது:
நெல் நடவு செய்து, 20வது நாளில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். தற்போது, களைக்கொல்லி தெளிக்க அதிகப்படியான மருந்து, ஆட்கள் தேவைப்படுகின்றனர். மேலும், ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. வேளாண்துறையினர் அறிவுரைப்படி 'ட்ரோன்' பயன்படுத்தி களைக்கொல்லி தெளித்தேன்.
சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு களைக்கொல்லி தெளிக்க, 250 மி.லி., மருந்து தேவைப்படும், களைக்கொல்லி தெளிப்பான் வாயிலாக ஒருவர், ஐந்து முறை தெளிக்க வேண்டும். தெளிப்பானில் இரண்டு பேர் தண்ணீர் நிரப்ப வேண்டும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக, 3,500 முதல் நான்காயிரம் ரூபாய் வரையில் செலவாகிறது.
களைக்கொல்லி
'ட்ரோன்' வாயிலாக களைக்கொல்லி தெளித்தால், ஒரு ஏக்கருக்கு, 125 மி.லி., களைக்கொல்லி மட்டுமே தேவைப்படுகிறது. 'ட்ரோன்'க்கு, 500 ரூபாய் வாடகை மற்றும் ஒரு ஆளுக்கு கூலி கொடுத்தால் போதும்.
'ட்ரோன்' வாயிலாக தெளித்ததில், 60 சதவீதம் பணம் மற்றும் நேரம் மிச்சமாகியுள்ளது. களைக்கொல்லி வீணாகாமல், பரவலாக தெளிக்கப்பட்டு நல்ல பலன் கிடைத்துள்ளது. விரைவில் வேளாண் பொறியில் துறையினர் 'ட்ரோன்'களை விலைக்கு வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்.
மேலும் படிக்க
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தி சாதனை படைத்த பெண் விவசாயிகள்!
Share your comments