மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்கள், வீட்டில் மாடு வளர்ப்பவர்கள் கன்று ஈனும் பொழுது என்னென்ன அறிகுறிகள் (Symptoms) தென்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கன்று ஈனுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, மாடுகளை கனிவோடு பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
அறிகுறிகள்:
கன்று ஈனுவதற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் மாடு அமைதியிழந்து காணப்படும். தீவனம் (Fodder) சரிவர உண்ணாது. வாலை அடிக்கடி சுற்றும். வாலின் பின் பகுதியை நக்குவதோடு, காலால் தரையை மெல்ல உதைக்கும். படுக்கும், எழுந்திருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும். மாட்டின் வெளி பிறப்புறுப்பு 2 முதல் 6 மடங்கு தடித்தும் தளர்ந்தும் சளி போன்ற திரவம் நீராக மாறி, கருப்பை வாய் வழியாக வழியும். மடியானது தடித்தும் பெரிதாகவும் இருக்கும். கன்று ஈனுவதற்கு சில மணி நேரங்கள் இருக்கும் போது சில மாடுகளில் மடியிலிருந்து சீம்பால் தானாக கசியும். இந்த அறிகுறிகள் தென்படும் பொழுது எந்த தொந்தரவும் இல்லாதவாறு தனியாக தொழுவத்தில் கட்ட வேண்டும். தரையில் வைக்கோல் (Paddy straw) பரப்பி சினை மாட்டிற்கும் கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் அமைக்க வேண்டும்.
மூன்று மணி நேரம்
கருப்பை வாய் வழியாக கன்றானது வெளியே தள்ளப்பட்டு முதல் பனிக்குடம் உடைகிறது. பிறகு இரண்டாம் பனிக்குடம் வெளிப்பிறப்புறுப்பில் தென்படும்.
கன்றின் கால்கள் மாட்டின் வெளி பிறப்புறுப்பின் வழியாக வந்தவுடன் இரண்டாம் பனிக்குடம் உடையும். இரண்டாம் பனிக்குடம் தானாக உடைய ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். கையால் உடைத்து கன்றை வெளியே எடுக்க முயன்றால் கன்றானது சுவாசிக்க முடியாமல் இறந்து விடலாம். இரண்டாம் பனிக்குடம் உடைந்த பிறகு கன்றின் தலை, வயிறு மற்றும் தொடைப்பகுதி மாட்டின் இடுப்புப் பகுதிக்கு வருவதால் மாட்டின் வயிறு வேகமாக விரிவடைந்து சுருங்கும். கன்று வெளியே வருவதற்கு அரை மணியிலிருந்து மூன்று மணி நேரம் ஆகும். கன்று ஈன்ற 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி விழுந்து விடும். அவ்வாறு விழவில்லையென்றால் கால்நடை மருத்துவரை (Veterinary doctor) அணுகலாம். முறையாக கன்று ஈன வைத்து, நஞ்சு கொடி அகற்றினால் கருப்பை 40 அல்லது 45 நாட்களில் சுருங்கி பழைய நிலைக்கு வந்து விடும். மாடும் வெகு சீக்கிரத்தில் சினைக்கு வந்து விடும். பாலும் நன்றாகக் கறக்கும்.
பேராசிரியர் உமாராணி,
கால்நடை சிகிச்சை வளாகம்
கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி.
kamleshharini@yahoo.com
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணி தீவிரம்!
வாழைத்தார் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி
Share your comments