தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வுத் தன்மைக்கேற்ப அவை உற்பத்தியாவது குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் (Ground Water) பெரும்பாலான இடங்களில் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்னையைத் தாண்டி விவசாய துறைக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே தண்ணீரின் மேலாண்மை (Water Management) பற்றி விவசாயிகளுக்கு விளக்க வேண்டியதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் மத்திய, மாநில அரசுகளின் கடமையாக உள்ளது.
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்
மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் திருச்சி துவாக்குடியில் செயல்படுகிறது பாசன மேலாண்மை பயிற்சி நிலையம். இங்கு விவசாயிகளுக்கு மட்டுமல்ல வேளாண் பொறியியல் துறை இன்ஜினியர்கள், விவசாய அலுவலர்கள், தண்ணீர் செல்லும் வாய்க்காலில் பணிபுரியும் பணியாளர்கள் வரை அனைவருக்கும் நீரை மேலாண்மை செய்வது குறித்து பயிற்சி (Training) அளிக்கப்படுகிறது என்கின்றனர் இயக்குனர் ராஜாமோகன், உதவி பேராசிரியர் பிரபாகரன். அவர்கள் கூறியதாவது: தற்போதுள்ள நவீன முறைப்படி மண் ஈரப்பதம் காட்டும் கருவி, பானி பைப் மற்றும் ஹைட்ரோஜெல் (Hydrogel) மூலம் பயிர்களுக்கான நீரின் தேவையை குறைக்க முயற்சிக்கிறோம்.
மண் ஈரப்பதம்
பானி பைப் என்பது பி.வி.சி., பைப்பின் அடிப்பகுதியை சுற்றி துளைகள் இட்டு நெல் வயலின் ஓரத்தில் ஊன்ற வேண்டும். உள்ளிருக்கும் மண்ணை அகற்ற வேண்டும். நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது துளைகளின் மேற்பகுதி வரை விவசாயிகள் நீர் கட்டுவர். மண் உறிஞ்சும் போது பைப்பின் உட்பகுதி நீரும் குறைந்து கொண்டே வரும். அதன் ஈரப்பதத்தை (Moisture) சோதிக்க வேண்டும். தரைமட்டத்தில் இருந்து 2 இன்ச் கீழ் வரை ஈரப்பதம் இருந்தால் நெல்லுக்கு போதும். வேர்ப்பகுதிக்கு நீர் இருந்தால் பயிர்கள் காயாது. மேற்பகுதியை மட்டும் பார்த்து விட்டு நீர் பாய்ச்சுவதை தவிர்க்கவே இந்த முறை செயல்படுத்துகிறோம். ஏக்கருக்கு 4 இடங்களில் பானி பைப் அமைக்கலாம்.
அடுத்ததாக தோட்டக்கால் பயிர்களுக்கு மண் ஈரப்பதம் காட்டும் கருவி மூலம் நீரின் தேவையை கண்டறியலாம்.
அந்தமானில் பாமாயில் சாகுபடி: உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!
கருவியை தரையில் ஊன்றும் போது நீலநிறம் காண்பித்தால் நீர் அதிகமாக உள்ளதென்றும் பச்சை நிறமென்றால் போதுமான தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். ஆரஞ்ச் நிறம் காண்பித்தால் நீர் ஊற்றுவதை ஒருநாள் தள்ளி ஊற்றலாம். சிவப்பு நிறம் காண்பித்தால் உடனடியாக நீர் ஊற்ற வேண்டும் என்று அர்த்தம். மூன்றாவதாக ஹைட்ரோஜெல். இது ரசாயனப் பொருள். கடைகளில் கிடைக்கும். ஏக்கருக்கு ஒரு கிலோ ஹைட்ரோஜெல் துாவ வேண்டும். இதன் அளவைப் போல 400 மடங்கு அளவிற்கு தண்ணீரை உறிஞ்சி சேமித்துக் கொள்கிறது. இதனால் நீர் ஆவியாவதும் வீணாவதும் தடுக்கப்படுகிறது.
மூன்றாண்டுகளுக்கு மண்ணில் இருந்து நீர் ஆவியாகாமல் பாதுகாக்கலாம். ஆழ உழவு செய்தால் மண்ணுக்கு அடியில் சென்று விடும் என்பதால் சட்டி கலப்பை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்போது மக்காச் சோளத்திலிருந்து இதேபோன்ற தாவர ஜெல் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் நீரை சிக்கனப்படுத்த வேண்டும் என்றனர்.
மேலும் படிக்க
Share your comments