வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் இனி அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாகி மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேளாண் பணிகள் (Agricultural works)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நேற்றுத் தொடங்கியது. இதனை அடிப்படையாக வைத்து விவசாயிகள் பல்வேறு வேளாண் பணிகளைத்திட்டமிட்டிருந்தனர். அப்பணிகளைத் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, வடமேற்கு பருவமழை காரணமாக, தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை (27-ந் தேதி) உருவாக வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுபெறும்.
பலத்த மழை (Heavy rain)
இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மிதமானமழை (Moderate rain)
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
பலத்த மழை (Heavy rain)
28, 29-ந் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அநேக இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் இனி அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாகி மழை பெய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments