புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் பயிருக்கு பயிர்காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
3500 ஹெக்டேரில் நெல் (Paddy on 3500 hectares)
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.அன்பரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கந்தர்வக் கோட்டை வட்டாரத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்தில் சுமார் 3500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காப்பீடுக் கட்டணம் (Insurance premium)
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2021-22ம் ஆண்டிற்கு சம்பா நெல்பயிருக்கு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூ.31,000 ஆகும். இதில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமிய தொகை 1.5 சதவிகிதம் மட்டுமே.இதன்படி ஏக்கருக்கு ரூ.465 காப்பீடு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதும்.
நடப்பாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்ற பயிர் காப்பீட்டு நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?)
இத்திட்டத்தில் பயிர்கடன் பெறும் மற்றும் பயிர்கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்யத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பயிர்கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர்கடன் பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடைசித் தேதி (Deadline)
பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது அரசு அனுமதி பெற்ற பொது சேவை மையங்களிலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்களை முன்மொழிவுப் படிவத்துடன் இணைத்து, காப்பீடு செய்யவுள்ள பரப்பிற்கான பிரீமியம் தொகையியை செலுத்த வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும்.
இழப்பில் இருந்து (From loss)
இதன்மூலம் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் பயிரில் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளான புயல், வெள்ளம், பருவம் தவறிய மழை, கடும் வறட்சி போன்றவைகளால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து காத்துக்கொள்ள முடிகிறது.
அது மட்டுமல்லாமல், நிலையான வருமானம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ளவும் முடியும். எனவே விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாகப் பயிர் காப்பீடு செய்து கொள்ளவும். பயிர் காப்பீடு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது கந்தர்வக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!
பருத்தியில் பளிச் லாபம் ஈட்ட- ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு!
Share your comments