'தென்னை நார் தொழிலை மேம்படுத்த வங்கிகள் கடன் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிசர்வ் வங்கிக்கு கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், தென்னை விவசாயம் பிரதானமான தொழிலாக உள்ளது. தென்னை நார், கயிறு மற்றும் தென்னை நார் சார்ந்தபொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவு செயல்படுகின்றன. கொரோனா பரவலால் ஊரடங்கு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, கண்டெய்னர்கள் தட்டுப்பாடு காரணமாக தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்னை நார்த் தொழில் (Coir Industry)
சங்க தலைவரும், ஐக்கிய நாடு சபை காயர் ஆலோசகருமான கவுதமன் கூறியதாவது: கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தில், பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்கள் 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தென்னை நார், காயர் பித்பிளாக் போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக தென்னை நார் தொழில் முடங்கியது. மேலும், கண்டெய்னர் லாரி வாடகை அதிகரிப்பு, மூலப்பொருளான மட்டை விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஆட்கள் சம்பளம் உயர்வு போன்ற காரணங்களினால், தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு (Timeline)
கண்டெய்னர் வாடகை அதிகரித்துள்ள சூழலில், தென்னை நார் விலை மிக குறைந்துள்ளது. இதனால், தொழில் மிகவும் பாதித்து, உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வங்கியில் பெற்ற கடன் செலுத்துவதற்கு காலக்கெடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
மனுவில், வங்கியில் மூன்று மாதம் பணம் கட்டாவிட்டால், செயல்படாத கணக்கு (NPA), என, மாறிவிடும். எனவே, தற்போதுள்ள சூழலில், தென்னை நார் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்குகள், செயல்படாத கணக்குகளாக உள்ளது.
தொழில் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பணம் கட்டாவிட்டாலும், வங்கி கணக்கு செயல்பாட்டில் இருக்க மூன்று மாதமாக உள்ள காலக்கெடுவை, ஆறு மாதமாக மாற்ற வேண்டும். வங்கியில் கடன் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்கள் தயாரித்து வழங்கினால் பயனாக இருக்கும்.
அதற்கேற்ப, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்ய வங்கி கடன் தாரளாமாக வழங்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அனுப்பப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்க
வீசும் காற்றைக் கட்டுப்படுத்தி கூடுதல் இலாபம் தரும் 'ஜிங்குனியானா' சவுக்கு மரம்!
மாட்டுத்தீவன மானியம் நிறுத்தம்: அதிர்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள்!
Share your comments