பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க அஞ்சல்துறை உதவுகிறது. எனவே 2000 ரூபாய் தவணைத்தொகையைப் பெற விவசாயிகள் தபால் அலுவலகத்திற்கு போனாலேபோதும்.
பிஎம் கிசான் திட்டம்
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் ரூ.6000 நிதியுதவி வழங்கும் 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' என்ற திட்டம் 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக (ரூ.2000 வீதம்) இந்த நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இ-கேஒய்சி
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கேஒய்சி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கட்டணம்
இதற்கு விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரரை அணுகி, ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையை பெற அஞ்சல் துறை ரூ.50 கட்டணம் வசூலிக்கிறது.
ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு, விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் OTP அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கேஒய்சி சமர்ப்பிக்கலாம்.
பிஎம் கிசான் பயனாளிகள் இ-கேஒய்சியை சமர்ப்பிக்க ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க/புதுப்பிக்க அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் ஐபிபி(இந்திய அஞ்சல் வங்கி)யின் சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை நகர மண்டலம், ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கும் சேவையை சுமார் 15,000க்கும் மேற்பட்ட பிஎம் கிசான் பயனாளிகளுக்கு 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கி வருவதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் க.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments