Credit : Deccan Herald
புரெவி புயலில் (Burevi Storm) இருந்து பயிர்களை பாதுகாக்க, விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை (Horticulture Department) அறிவுரை வழங்கியுள்ளது. தோட்டக் கலைத் துறை இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயிர் பாதுகாப்பு தொடர்பாக, விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்துள்ளார்.
மா, கொய்யா, பலா:
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில், இடைப்பருவ அறுவடைக்கு தயாராக இருக்கும், மா மரங்களில் அறுவடை (Harvest) செய்து, மரத்தின் சுமையை குறைக்க வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். உரிய வடிகால் வசதி (Drainage facility) செய்ய வேண்டும்; சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில், தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும்.
மிளகு
மிளகு (Pepper) கொடிகளை சரியாக கட்டிவிட வேண்டும். தாங்கு செடிகளால் நிழலை ஒழுங்கு படுத்த, கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். பூஞ்சாண நோய்களை தடுக்க, டிரைக்கோ டெர்மா விரிடி (Tricho derma viridis) மற்றும் சூடோமோனாஸ் (Pseudomonas) உயிரியல் கொல்லிகளை நிலத்தில் தெளிக்க வேண்டும்.
கிராம்பு, ஜாதிக்காய்
காய்ந்து போன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில், தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும்.
கொக்கோ
காய்ந்து போன இலைகள் மற்றம் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். முதிர்ந்த பழங்களை அறுவடை (Harvest) செய்ய வேண்டும்.சிறிய செடிகளை, தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும்
ரப்பர்
செடியின் அடிப்பாகத்தை சுத்தம் செய்து, உள்நோக்கி சாய்வு அமைத்து, வடிகால் வசதி செய்ய வேண்டும். ரப்பர் பால் வடிக்கும் பகுதியில், பாதுகாப்பு பூச்சு பூச வேண்டும். மழை பாதுகாப்பு கவசம் (Rain protection shield) பயன்படுத்த வேண்டும்.
வாழை
காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில், கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு, மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது தைல மர கம்புகளை, ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி, நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.
காய்கறி மற்றும் பூச்செடிகள்
செடிகளை சுற்றிலும் மண் அணைக்க வேண்டும். டிரைக்கோ டெர்மா விரிடி என்ற பூஞ்சாண உயிரியல் கொல்லியை நிலத்தில் தெளிக்க வேண்டும்.
மரவள்ளி, பப்பாளி:
செடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டுப்பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.
பசுமைக் குடில்:
பசுமை குடிலின் (Green hut) அடிப்பாகத்தை பலமாக, நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் கட்ட வேண்டும். பசுமை குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பத்திரமாக மூடி, உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும்.பசுமை குடில்களின் அருகில் மரங்கள் இருந்தால், அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்துமல்லி, கத்தரி, இஞ்சி போன்ற பயிர்களுக்கு, உடனடியாக பயிர் காப்பீடு (crop insurance) செய்ய வேண்டும் என்று தோட்டக்கலை துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கேரளாவில் பரவுகிறது தென்னை வேர் வாடல் நோய்! எல்லையோரத் தமிழக மாவட்டங்களிலும் பாதிப்பு!
அரசின் அருமையான நடவடிக்கை! நிவர் புயலால் சாய்ந்த மரங்களிலிருந்து உரம் தயாரிப்பு!
Share your comments