கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க ஒவ்வொரு மூட்டைக்கும், 'க்யூ.ஆர்., கோடு' (QR Code) வழங்கப்படுகிறது. நடப்பாண்டு இந்த நடைமுறை புதியதாக பின்பற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி அதிகளவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு வெளிமார்க்கெட்டில், கொப்பரை விலை சரிந்துள்ளதால், மத்திய அரசு கொப்பரை ஆதார விலையாக நிர்ணயித்த, கிலோவுக்கு 105.90 ரூபாயில் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
கொப்பரை விற்பனை (Cauldron sale)
கொப்பரையில் ஆறு சதவீதம் ஈரப்பதம் மட்டுமே இருக்க வேண்டும்; சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட விபரங்களுடன் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஏக்கருக்கு, 216 கிலோ என மொத்தம், 2,500 கிலோ கொப்பரையை அதிகபட்சமாக ஒரு விவசாயி விற்பனை செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம், 9ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, ஒரு கோடியே 72 லட்சத்து 51 ஆயிரத்து 110 ரூபாய் மதிப்பிலான, 162.90 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
க்யூ.ஆர். கோடு (QR Code)
கொள்முதல் செய்யப்படும் கொப்பரை, தரம் பிரித்து, மூட்டைகளில், 'பேக்கிங்' செய்யப்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மூட்டைக்கும், 'க்யூ.ஆர்., கோடு' வழங்கப்படுகிறது. ஆனால், ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது: கடந்த முறையை விட, இந்த முறை கொப்பரை கொள்முதல் செய்வது முறையாக நடக்க வேண்டும், என, அரசு அறிவுறுத்தியுள்ளது. அதில், முறைகேடுகளை தவிர்க்க, ஒவ்வொரு மூட்டைக்கும் 'க்யூ.ஆர்., கோடு' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு விவசாயி கொண்டு வரும் கொப்பரைகளை தரம் பிரித்து, ஒவ்வொரு மூட்டையாக கட்டும் போது, 'க்யூ.ஆர்., கோடு' வழங்கப்படும்.
இதனை கொண்டு, எந்த விவசாயி கொண்டு வந்த கொப்பரை, யார் கொள்முதல் செய்தது, கொள்முதல் செய்த மையம் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும். 'ஆன்லைன்' வாயிலாக விவசாயிகள் விபரங்கள் அனுப்பப்படுவதால், அவை இவற்றுடன் இணைத்து பரிசோதிக்க முடியும். மேலும், முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்க்க முடியும். அதிகாரிகள், விவசாயிகள் யாரும் தவறு செய்ய முடியாது. தரம் இல்லாத கொப்பரை என புகார் வந்தால், யார் கொண்டு வந்தது என சரிபார்க்க முடியும். அந்த நபர், கொண்டு வந்த மூட்டைகள் முழுவதும் பரிசோதித்து பார்க்க முடியும். இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது.
விவசாயிகள் வேண்டுகோள்
கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க, 'க்யூ.ஆர்., கோடு' வசதி கொண்டு வந்துள்ளது வரவேற்கதக்கது. அதேநேரத்தில், விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் செய்ததும், குறிப்பிட்ட நாட்களில் பணம் பட்டுவாடா செய்யப்படாமல், இழுத்தடிக்கப்படுகிறது. ஒரு விவசாயிடம் ஒரு முறை மட்டுமே, கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. அடுத்த கொள்முதல் எப்போது செய்யப்படும் என்ற விபரம் அதிகாரிகளுக்கே தெரியவில்லை.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமான இத்திட்டத்தை, பெயரளவுக்கு செயல்படுத்தாமல், முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பணம் பட்டுவாடா உடனடியாக கிடைக்கவும், விவசாயிகளிடம் மறுமுறை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
மேலும் படிக்க
Share your comments