தரிசு நிலங்களை வேளாண் விளை நிலங்களாக மாற்ற முன்வரும் விவசாயிகளுக்கு கு ஹெக்டேருக்கு ரூ.13,490 மானியமாக வழங்கப்படும் என திண்டுக்கல் வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரிசு நிலங்கள் (Barren lands)
பொதுவாக விளைநிலங்களில், அந்தந்தத் தட்பவெப்பநிலைக்கு ஏற்று பயிர்களை சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டுவது எளிதான காரியம்.
ஆனால், விவசாயத்திற்கு மிகவும் சவாலான இலக்கு என்றால், அது, தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற முயற்சி மேற்கொள்வதுதான். இதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
அட்மா திட்டம் (Atma Project)
இது தொடர்பாக திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெ.நாகேந்திரன் கூறியதாவது:
வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றுவதற்கான பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தரிசு நிலங்களை வேளாண் விளை நிலங்களாக மாற்றும்போது, உணவு உற்பத்தி அதிகரிக்கும்.
ரூ.13,490 மானியம் (Grant of Rs.13,490)
மேலும், மானாவாரி பயிா்களை சாகுபடி செய்வதால் விவசாயிகள் வருவாய் ஈட்டுவதற்கும் வழி ஏற்படுகிறது. இத்தகைய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் மூலம் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டங்களின் மூலம் ஒரு ஹெக்டோ் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றுவதற்கு ரூ.13,490 மானியம் வழங்கப்படுகிறது.
20 ஹெக்டோ் நிலம் (20 hectares of land)
இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் வட்டாரத்தில் 20 ஹெக்டோ் தரிசு நிலம், விளை நிலமாக மாற்றுவதற்கு மானியத் தொகை வழங்கப்படும்.அதேபோல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்களின் மூலமாகவும் தரிசு நிலங்கள் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாக உருவாக்கி, அந்த பகுதியில் அரசின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன.
விவசாயிகளுக்கு பயிற்சி (Training for farmers)
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தின் கீழ் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை விவசாயிகள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments