பெண் விவசாயிகளால் நடத்தப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கடந்தாண்டு மட்டும் 18 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடத்தி, 33 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி அசத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், இனாம் பைரோஜி ஊராட்சியில் பெண் விவசாயிகளால், 'நபார்டு' நிதி உதவியுடன், 2017 பிப்ரவரியில், 'வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' துவங்கப்பட்டது. அதன் இயக்குனர்களாக சாந்தி, பூங்கொடி, அமுதா, கந்தாயி, புஷ்பா உள்ளனர். அவர்களின் அதிகபட்ச கல்வித்தகுதி ஏழாம் வகுப்பு வரை மட்டுமே. நிறுவன முதன்மை செயல் அலுவலராக, பி.எஸ்சி., வேளாண்மை படித்த சிவராணி உள்ளார்.
பெண் விவசாயிகள் (Female Farmers)
சங்ககிரி, மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி ஆகிய ஒன்றியங்களில் 48 ஊராட்சிகளில் இருந்து, 2,211 பெண் விவசாயிகள் (Female Farmers) பங்குதாரர்களாக உள்ளனர். நிறுவனத்துக்கு தேசிய அளவில், பல்வேறு விவசாய மானிய திட்டங்களில், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் டிராக்டர், சூரிய உலர்த்தி கூடம், எண்ணெய் ஆட்டும் இயந்திரம், கடலை உடைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன.
பயிற்சி (Training)
விவசாயிகளிடம் தலா 1,000 ரூபாய் பங்குத்தொகை வீதம், 22 லட்சத்து, 11 ஆயிரம் ரூபாய், மானியம், 55 லட்சம் என, 77 லட்சத்து, 11 ஆயிரம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட நிறுவனத்தில், ஆரம்பத்தில் பங்குதாரர்களான விவசாயிகளுக்கு மட்டும் விதை, இடுபொருட்களை தரமாக வாங்கி கொடுத்தோம். தொடர்ந்து, மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைப்பது குறித்து, பங்குதாரர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயிற்சி (Training) அளித்து விற்றோம்.
தற்போது சிறுதானியம், எண்ணெய் வித்துகளை மொத்தமாக வாங்கி சுத்தப்படுத்தி, தரம் பிரித்து, 'நறுமுகை' என பெயரிட்டு, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறோம்.
அதேபோல் சுத்தமான எண்ணெய் வகைகளை, சொந்தமாக ஆட்டி பாட்டில்களில் அடைத்து விற்கிறோம். பங்குதாரர்களான விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை, மதிப்பு கூட்டி அங்காடிகளில் விற்கிறோம். இரு ஆண்டாக, இனாம் பைரோஜி தொழிற்கூடத்தில் ஒரு அங்காடி, அரியானுார் சந்திப்பில் ஒரு அங்காடியில், எங்கள் தயாரிப்புகளை விற்று வருகிறோம்.
வெளிநாடுகளில் ஏற்றுமதி (Export in Abroad)
மாதந்தோறும் கூட்டம் நடத்தி வரவு, செலவு, ஜி.எஸ்.டி., தாக்கல் செய்து கணக்கு பராமரிக்கப் படுகிறது. 2018 நிதியாண்டில், 4,637 ரூபாய் மட்டும் லாபம் ஈட்டியது. ஆனால், 2020 - 2021ல், 18 கோடியே, 28 லட்சத்து, 85 ஆயிரத்து 181 ரூபாய்க்கு வர்த்தகம் நடத்தப்பட்டு, 33 லட்சத்து, 6,347 ரூபாய் நிகர லாபம் பெற்றுள்ளது. இதன்வாயிலாக பங்குதாரர்களுக்கு, 2.91 லட்சம் ரூபாய், 'டிவிடென்ட்' வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அதே நிதிஆண்டில் அரசுக்கு, 8 லட்சம் ரூபாய் முன் வரியாக செலுத்தியுள்ளோம். 2019ல், தமிழக அரசு சிறந்த தொழில் முனைவோர் விருதை வழங்கியது. லாபத்துடன் செயல்படும், பெண் விவசாயிகளின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, கடந்த 1ம் தேதி, இயக்குனர் சாந்தியுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் கலந்துரையாடியது உற்சாகம் அளித்தது. நிறுவனம் மூலம் மண்புழு உரம், காளான் வளர்ப்பு, அசோலா பசுந்தீவன உற்பத்தி பயிற்சி வகுப்பும் நடத்தப்படுகிறது. தயாரிப்புகளை, எங்கள் அங்காடி தவிர்த்து, மற்ற கடை, வெளிமாநிலம், வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யவும் உரிமம் பெறப்பட்டுள்ளது. செலவுகளை குறைத்து வருமானத்தை பெருக்குவதே குறிக்கோள்.
மேலும் படிக்க
ஆகாய தாமரையில் இயற்கை கொசு மருந்து: ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!
Share your comments