ஒருங்கிணைத்த சிப்பம் கட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனைப் பெற்று பயன்பெறுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நிதி விளக்க கூட்டம்
தேனி மாவட்டம் கம்பத்தில், தோட்டக்கலைத்துறையும், எச்.டி.எப்.சி. வங்கியும் இணைந்து விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்பிற்கான நிதி விளக்க கூட்டம் நடந்தது. கம்பம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டிராணா தலைமை வகித்தார். எச்.டி.எப்.சி. வங்கியின் மேலாளர்கள் தினேஷ், பாலமுரளி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கு தேவைப்படும் கடனுதவி, மானியம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
ரூ.6 லட்சம் மானியம்
அப்போது, ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை ரூ.17.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.6.12 லட்சம் மானியம் (35 சதவீதம்) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோல், தேவையான இயந்திரங்கள் கொள்முதல், அறுவடைக்கு பின் செய்நேர்த்தி கட்டமைப்புகளுக்கான கடனுதவி விபரங்களை விளக்கினர்.
மானியத்தில் விதைகள்
தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் தக்காளி, மிளகாய், மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, கொக்கோ, அத்தி கன்றுகள், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொட்டை முந்திரி, முருங்கை கன்றுகள், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் காய்கறி விதைகளும் மானியத்தில் வழங்குவதாக உதவி இயக்குனர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
Share your comments