ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பைத் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளுக்கு மாட்டு கொட்டகை மற்றும் எருக்குழி அவசியம் இருத்தல் வேண்டும். நேரில் கள ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பேராவூரணி வட்டாரத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிலையான வருமானம் கிடைத்திட வழிவகை செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், தமிழக அரசு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க ரூ.50,000 மானியம் வழங்க உள்ளது.
தகுதி
பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர விரும்பும் விவசாயிகளுக்கு குறைந்தது ஒரு எக்டர் நஞ்சை நிலம் அவரது பெயரில் இருக்க வேண்டும். ஆடு, மாடு, கோழி ஏதும் இல்லாதவராக இருக்க வேண்டும். நெல் சாகுபடி செய்ய வேண்டும். தேனீ பெட்டி, பழ மரக்கன்றுகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்படும். மண்புழு உரத் தொட்டி அமைத்து தரப்படும்.
பஞ்சாயத்துகள்
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் 2022-23 ஆம் ஆண்டில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட திருச்சிற்றம்பலம், வளப்பிரமன்காடு, பின்னவாசல், கல்லூரணிகாடு, தென்னங்குடி, அலிவலம் மற்றும் புனல் வாசல் பஞ்சாயத்துகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை
இந்த பஞ்சாயத்துகளில் இருந்து 80 சதவீதம் விவசாயிகளுக்கும், மீதமுள்ள பஞ்சாயத்துகளில் இருந்து 20 சதவீதம் விவசாயிகளும் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு மாட்டு கொட்டகை மற்றும் எருக்குழி அவசியம் இருத்தல் வேண்டும்.
ஆவணங்கள்
விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதார் எண் ஆகியவற்றுடன் பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது அவரவர் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றவுடன் நேரில் கள ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!
Share your comments