1. விவசாய தகவல்கள்

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்த ஆலோசனை!

R. Balakrishnan
R. Balakrishnan
Coconut trees

தென்னை மரங்களைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார். தென்னையிலும் வாழைமரங்களிலும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் தாக்குதல் நம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே பருவத்தில் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகளில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. நடப்பாண்டு ஒருசில பகுதிகளில் இதன் தாக்குதல் தென்படுகிறது.

சுருள் வெள்ளை ஈக்கள்:

வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள், மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளினின்று வெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்துகொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. ஏறத்தாழ 20 முதல் 30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறிக் கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிக்கு பரவுகின்றன. இவை காற்றில் பரவி அடுத்தடுத்த தென்னந் தோப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Also Read : சென்னையை பசுமையாக்க 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு!

அறிகுறிகள் :

​குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் (Coconut trees) ஓலைகளின் அடியில் இப்பூச்சிகள் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால் கீழ்மட்ட அடுக்கிலுள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து காணப்படும். ​வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களை தவிர, வாழை, சப்போட்டா ஆகிய மரங்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகின்றன.

கட்டுப்படுத்த நடவடிக்கைகள்:

மஞ்சள் நிறமானது, வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களைக் கவரும் தன்மையுடையதால், மஞ்சள்நிற பாலித்தீன் தாள்களிலான ஆமணக்கு எண்ணெய் தடவிய, ஐந்தடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், ஐந்து அல்லது ஆறு அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்தழிக்கலாம். மேலும் மஞ்சள் விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந் தோப்புகளில் அமைத்து மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களைக் கவர்ந்தழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்கள் கொண்டு வேகமாக நீரைப் பீய்ச்சுவதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.

Also Read: அழிவின் விளிம்பில் உள்ள பனைமரங்களை காக்க நடவடிக்கை!

தென்னைமரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோப்புகளில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரைவிழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பலனளிக்கும். இந்த இரைவிழுங்கிகளின் முட்டைகளடங்கிய அட்டையானது, திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை வாங்கிப் பயன் பெறலாம்.

எனவே, தென்னை விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்திடுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க

பார்த்தீனிய களையை அழிக்க உதவும் மெக்சின் வண்டுகள்

தமிழக அரசின் பயிர்கடன் அறிவிப்பு! விவசாயிகள் ஆனந்தம்

English Summary: Rugose curl white flies attacking coconut: advice to control! Published on: 26 August 2021, 12:39 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.