பயறு வகைப் பயிர்களில் உளுந்து முதன்மைப் பயிராகவும், புரதச் சத்து மற்றும் உடல் வளர்ச்சிக்கும், அவசியமானதாக உள்ளது. பொதுவாக பயறு வகைப் பயிர்களில் உள்ள புரதத்தின் அளவு தானியப் பயிர்களின் அளவைவிட 2 முதல் 3 மடங்கு வரை அதிக இருக்கும். உளுந்து பயிர் குறைந்த நாளில், அதிக மகசூல் தருவதால், பெரும்பாலான விவசாயிகள் உளுந்து சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில், 8.75 ஹெக்டர் பரப்பில், 5.85 லட்சம் மெட்ரிக் டன் பயறு வகை பயிர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பிற தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகளின் உற்பத்தி திறன் சற்று குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், விவசாயிகள் பயறு வகைகளை மானாவாரி பயிராகவோ, கலப்பு பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ சாகுபடி செய்கின்றனர்.
உளுந்தின் மகசூல் அதிகரிக்க சான்று பெற்ற விதைகளைக் கொண்டு தனி பயிராக சாகுபடி செய்து மூலம் உற்பத்தியை பெருக்க முடியும். தற்போது விவசாயிகள் வம்பன் 5, 6, 8, கோ 6 ரக விதைகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வகை உளுந்து 65 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், உடுமலை பகுதியிலுள்ள உள்ள விவசாயிகள் வம்பன் 8 ரகத்தை அதிகம் பயிரிடுகிறார்கள். வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வம்பன் 8 ரகம் கிடைப்பதால் விவசாயிகள் பெற்று கொள்ளலாம் என அதன் இயக்குனர் தெரிவித்தார். சாதாரண விதைப்பு செய்ய ஏக்கருக்கு எட்டு கிலோவும், வரிசை நடவுக்கு ஐந்து கிலோவும் போதுமானது.
மேல் கூறிய நடைமுறையில் சாகுபடி செய்யும் போது ஒரு செடிக்கு, 50 முதல் 70 காய்கள் வரை உற்பத்தியாகும். ஒரு காயினுள், 8 விதை வரை இருக்கும். இதனால், இரண்டரை ஏக்கருக்கு ஒரு மெட்ரிக் டன் வரை மகசூல் கிடைக்கும் என்று கூறினார்.
Share your comments