தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே லாரிகளில் வந்து விற்பனை செய்வோரிடம் விவசாயிகள் போலி உரங்களை வாங்கி ஏமாற வேண்டாம் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளிடம் போலியான உரங்கள் விதைகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேளாண், தோட்டக்கலைத்துறையினர் தீவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். போதுமான மழை பொழிவு இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர்.
தட்டுப்பாடு
பெய்கின்ற மழையைப் பொறுத்து விவசாயப் பணிகள் நடக்கின்றன. தற்போது ஓரளவிற்கு மழை பெய்து உள்ளதால் விவசாயப் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. விதைகள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லாபம் ஈட்ட
இதை பயன்படுத்தி போலியான வியாபாரிகள் போலியான உரம், விதைகள் கொடுத்து ஏமாற்றுகின்றனர். பெயர் தெரியாத கம்பெனியாக இருப்பினும் அவசியத்தை உணர்ந்து விவசாயிகள் சரிவர விசாரிக்காமல் விலை கொடுத்து இந்த உரங்களை வாங்கி ஏமாறுகின்றனர்.
போலி உரம்
அருப்புக்கோட்டை அருகே வடக்கு நத்தம் கிராமத்தில் இயற்கை உரம் என சொல்லி ஒரு பயோடெக் நிறுவனம் களிமண்ணை கொடுத்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார்.
போலியான விதைகளை விலை கொடுத்து வாங்கி விதைத்து பின்னர் ஒன்றும் வராமல் போன உடன் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணருகின்றனர்.
இதே போன்று கடந்தாண்டு ஆமணக்கு நத்தம் கிராமத்தில் உயிர் உரம் எனச் சொல்லி ஒரு நிறுவனம் போலியான உரத்தை விற்க முயல, விவசாயிகள் அதை கண்டுபிடித்து அவர்களை விரட்டி உள்ளனர்.
ஏமாற வேண்டாம்
இது குறித்து குமரன், வேளாண் உதவி இயக்குனர், எம். ரெட்டியபட்டி கூறியிருப்பதாவது:
தற்போது விவசாய நேரம் என்பதால் விவசாயிகளிடம் போலியான உரங்களை கொடுத்து ஏமாற்றியதாகத் தகவல் வந்தது. அரசு மானியத்துடன் கூடிய விதைகள், உரங்கள் வேளாண் நிலையத்தில் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இது போன்று இரவு நேரத்தில் லாரிகளில் வந்து இறக்கிச் செல்லும் போலி உரங்களை வாங்கி ஏமாற கூடாது.
இதுபோன்று வரும் உரங்களை, உடன் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வந்து ஆய்வு செய்த பின் தான் வாங்க வேண்டும். அரசு அனுமதிபெற்ற கடைகளில் தான் உரங்கள் விதைகளை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments