முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, செண்டுமல்லி உட்பட பூ சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
செண்டு மல்லி சாகுபடி
உடுமலை பகுதிக்கு, மல்லிகை உட்பட மலர்கள், பிற மாவட்டங்களில் இருந்தே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. புங்கமுத்துார், தளி, பாப்பனுாத்து, பெரியகோட்டை உட்பட பகுதிகளில், ஆயுத பூஜை சீசனுக்காக, கோழிக்கொண்டை, செண்டு மல்லி உட்பட சாகுபடிகளை (Cultivation) விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம். குறைந்த பரப்பளவில், மல்லிகை சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சொட்டு நீர் பாசன முறையால் குறைந்த தண்ணீர் தேவை, சாகுபடி செலவு குறைவு, முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில், தற்போது பரவலாக பூக்கள் சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபடத் துவங்கியுள்ளனர். தற்போது பெரியகோட்டை சுற்றுப்பகுதியில், விநாயகர் சதுர்த்தி சீசனுக்காக செண்டு மல்லி சாகுபடி செய்துள்ளனர். அதிக பரப்பில், சாகுபடி செய்யாமல், ஒரு ஏக்கருக்கும் குறைவாக, இச்சாகுபடியில், ஈடுபடுபவர்கள் அதிகளவு உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
செண்டு மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை சத்தியமங்கலம் உட்பட பகுதிகளில் இருந்து வாங்கிவருகிறோம். ஏக்கருக்கு, 12 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்து, 60 நாட்களில், பூ அறுவடையை துவக்கலாம்.
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, தொடர் கண்காணிப்பு செய்து, மருந்து தெளிக்க கூடுதல்செலவாகிறது.பூ சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் உட்பட மானியத் திட்டங்களில், தோட்டக்கலைத்துறை வாயிலாக முன்னுரிமை அளித்தால், பயனுள்ளதாக இருக்கும். நடப்பு முகூர்த்த சீசனில், செண்டு மல்லிக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
மேலும் படிக்க
சீசன் இல்லாத காலத்திலும் மல்லிகை சாகுபடி சாத்தியமே!
ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வுக்கு ஒப்புதல்!
Share your comments