பிஎம் கிசான் திட்டத்தில் பெற்ற நிதியுதவியை இவர்கள் மட்டும் உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் பயனாளிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் பெற்றத் தொகையை ஏற்கனவே செலவழித்துவிட்ட நிலையில், அரசு தற்போது கேட்பது அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பிஎம் கிசான் திட்டம்
நாட்டிலுள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தப் பணம் தலா 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
யாருக்கு கிடைக்காது?
பிஎம் கிசான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி கிடைத்துவிடாது. தகுதியுள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்துள்ள விவசாயக் குடும்பங்கள் பயன்பெறலாம். அதேநேரம், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் போன்றோர் பயன்பெற முடியாது. பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் 11 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது. கடைசியாக மே 31ஆம் தேதிதான் பிரதமர் நரேந்திர மோடி கையால் 11ஆவது தவணை விடுவிக்கப்பட்டது. 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நிதியுதவியைப் பெற்றனர்.
குற்றச்சாட்டு
பிஎம் கிசான் திட்டத்தில் மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, தகுதியற்ற நபர்களுக்கு இந்த நிதியுதவி செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிதியுதவி பெறுவதில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. பெயர், ஆதார், நில விவரங்களைத் தவறாக வழங்கி சிலர் மோசடி செய்கின்றனர்.
அரசு உத்தரவு
தகுதியற்றவர்களுக்கு நிதியுதவி செல்வதால் இத்திட்டம் செல்லவேண்டியவர்களுக்கு சென்று சேர்வதில்லை என்ற புகார் உள்ளது. எனவே பிஎம் கிசான் திட்டத்தின் மூலமாக தகுதியில்லாமல் நிதியுதவி பெற்றவர்களும், சட்ட விரோதமாக பலன்களை அனுபவித்தவர்களும் உடனடியாக வாங்கிய நிதியுதவியை திரும்ப வழங்குமாறு அரசு எச்சரித்துள்ளது.
கணவன் - மனைவி
வருமான வரி செலுத்துபவர்களும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இணைந்து நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அதேபோல, கணவன் - மனைவி இருவருமே நிதியுதவி பெறுவதாகவும் தெரியவந்துள்ளது. விதிமுறைப்படி இது தவறாகும். இதுபோன்று நிதியுதவி பெறுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களை திட்டத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments