ஒரு காலத்தில், விவசாயம் செய்வதென்றால், மாடுகளை பூட்டி ஏர் உழுவது, ஆட்களை கொண்டு நடவு செய்வது, அறுவடைக்கு (Harvest) குறைந்தது, 40 பணியாட்களை தேட வேண்டியதும் இருந்தது. நெற்கதிர்களை அறுத்து, அவற்றை கட்டாக கட்டி, நெற்களங்களில் குவித்து, அதிலிருந்து நெல் மணிகளாக பிரித்தெடுப்பதற்குள், விவசாயிகளுக்கு பெரும்பாடாய் இருக்கும். தற்போது இயந்திரங்கள் வருகையால், பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகள், ஒரு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. உழவு, நடவு, அறுவடை என, இயந்திரங்கள் வருகையால் விவசாயிகள் சிரமமின்றி விவசாயம் செய்து வருகின்றனர். இயந்திரங்கள் (Machines) வருகையால் விவசாய தொழிலுக்கு தேவையான ஆட்கள் பற்றாக்குறை பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துள்ளது.
உழவு:
மாடுகளை கொண்டு நாள் முழுதும், ஒன்றிரண்டு ஏக்கர் விளைநிலங்களை உழுத நிலையில், தற்போது, டிராக்டர்களின் (Tractor) உதவியுடன், ஒரு மணி நேரத்திற்கு, 2 ஏக்கர் நிலத்தை உழவு செய்ய முடிகிறது. டிராக்டர்களில் பல்வேறு வகையான கலப்பைகள் உள்ளதால், கடினமான மண் பகுதியைகூட எளிதாக உழுதுவிட முடிகிறது.
நடவு:
மாடுகளுக்கு பதிலாக, டிராக்டர்கள் மூலம், உழவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நடவு செய்யவும், இயந்திரங்கள் வந்துவிட்டன. 1 ஏக்கர் விவசாய நிலத்தை நேர்த்தியாகவும், சீரான இடைவெளியிலும், ஒரு மணி நேரத்தில் நட்டு விடுகின்றன. இதற்கு குறைவான விதை நெல் (Padu seed) தான் செலவாகிறது.இதுவே கைநடவு முறை என்றால், நாற்றாங்கால் பறிப்பு, நடவு என, ஏக்கருக்கு, 15 பேர் தேவை. இயந்திர நடவு எளிதாக இருப்பதாலும், நடவு செய்ய ஆட்களை தேடி அலைய வேண்டியதும் இல்லை.
அறுவடை:
அறுவடை (Harvest) செய்ய, பிரத்யேக இயந்திரங்கள் வந்துவிட்டன. ஒரு மணி நேரத்தில், 1 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்கின்றன. நெற்கதிர்களை உள்ளிழுக்கும் அறுவடை இயந்திரம், நெல் தனியாக, வைக்கோல் (Straw) தனியாக பிரித்துவிடுகிறது. துாசி, பதர், உள்ளிட்டவை வெளியேற்றப்பட்டு, சுத்தமான நெல்மணிகள் தனியாக சேமிப்பு தொட்டிக்கு வந்துவிடுகிறது. சேமிப்பு தொட்டி நிரம்பியவுடன், தயாராக நிற்கும் டிராக்டர்கள் அல்லது நெற்களத்தில் கொட்டப்படுகிறது. அவை உடனடியாக மூட்டை கட்டப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அறுவடை இயந்திரம் (Harvest Machine), விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கின்றனர், விவசாயிகள். இல்லையெனில், 1 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்து, அதை நெல்மணிகளாக தனியாக பிரிப்பதற்கு குறைந்தது, 40 பணியாட்கள் தேவை என்கின்றனர்.
வைக்கோல் சேகரிப்பு:
அறுவடை இயந்திரங்களில் இருந்து வெளிவரும் வைக்கோல் தூள், விளைநிலங்களிலேயே எரிக்கப்பட்டது. தற்போது அதற்கும் தீர்வு கிடைத்து, வைக்கோல்களை வாரி சுருட்டி பேல்களாக மாற்றும் இயந்திரங்கள் வந்துவிட்டன. தற்போது வைக்கோல் வீணாவதும் தடுக்கப்பட்டு, ஒரு பேல், 120 முதல், 150 ரூபாய் வரை விற்பனையாகி, லாபமும் ஈட்டித் தருகிறது. சில ஆண்டுகளாக அறுவடை பணிகளுக்கு முற்றிலும் ஆட்கள் கிடைப்பதில்லை. இயந்திரம் மூலம் தான் அறுவடை செய்கிறார்கள் விவசாயிகள். இதன் மூலம், 1 ஏக்கரை ஒரு மணி நேரத்தில் அறுவடை செய்து விட முடிகிறது. ஆட்கள் பற்றாக்குறை உள்ள இந்த சூழலில், இயந்திரங்கள் இல்லையென்றால், விவசாயம் செய்வதே கடினம்.
உழவுக்கு இயந்திரக் கட்டணம்
ஒரு ஏக்கருக்கு:
நடவுக்கு கட்டணம் - ரூ.1,400
அறுவடைக்கு கட்டணம் - ரூ.4200 - 5000
ஒரு மணிநேரத்திற்கு வைக்கோல் சுருட்ட - ரூ.2000- - 2200
ஒரு பேலுக்கு கட்டணம் ரூ. 40
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வெள்ளாடுகளில் மடி நோயைத் தடுக்க கால்நடை மருத்துவர் அறிவுரை!
"தனியா உலகம்" இணையக் கருத்தரங்கில் கலந்துரையாடல்! தனியா உற்பத்தி ஏற்றுமதியை அதிகரிக்க ஏற்பாடு!
Share your comments