சிப்பி காளான், பால் காளான் தயாரிப்பதற்கு கண்டிப்பாக காளான் தாய் வித்துகள் உருவாக்க வேண்டும். காளான் உற்பத்தி செய்பவர்களில் பெரும்பாலானோர் தாய் வித்துகளை கடையில் வாங்கி வைக்கோல் (Paddy straw) கொண்டு படுக்கை வித்து அமைக்கின்றனர். தாய் வித்து தயாரிப்பதற்கு ஆட்டோகிளேவ் இயந்திரம், லேமினார் சேம்பர் தேவைப்படும். வெப்பநிலை (Temperature) 25 - 28 டிகிரியாக பராமரிக்க வேண்டும்.
காளான் வித்துகள் தயாரிக்கும் முறை
திசு வளர்ப்பு மூலம் உருவாக்கிய பூஞ்சாண இழைகளை (மைசீலியம்) மூலவித்தாக பயன்படுத்த வேண்டும். மூலவித்து தயாரிக்க சோள மணி அல்லது நெல் மணிகள் தேவை. தரமான சோள மணிகளை (Maize) அரைமணி நேரம் ஊறவைத்து முக்கால் வேக்காட்டில் எடுக்க வேண்டும். இதை ஒரு மணி நேரம் உலரவிட வேண்டும். வேகவைத்த சோள மணிகளில் காளான் வேகமாக வளரும். இதன் அமில, காரத்தன்மை 5 - 6 வரை இருக்கும். காளான் மைசீலியம் வளர்வதற்கு 7.0 - 7.5 அமில காரத்தன்மை இருக்க வேண்டும். எனவே கால்சியம் கார்பனேட் (Calcium carbonate) 2 சதவீதத்தை, சோள மணியுடன் கலந்தால் அதன் வளரும் தன்மை வேகமாகும். இது காளான் வித்துகள் ஒன்றோடொன்று ஒட்டுவதையும் தடுக்கும்.
இதை சிறிய பாலித்தீன் பையில் 300 கிராம் அளவுக்கு சேர்த்து வாய்ப்பகுதியில் பி.வி.சி. குழாயை (PVC Pipe) மூடி போல் அமைத்து பஞ்சால் மூட வேண்டும். இதை ஒரு மணி நேரம் 'ஆட்டோகிளேவ்' இயந்திரத்தில் வைத்து தொற்று நீக்கம் செய்ய வேண்டும். அடுத்ததாக லேமினார் சேம்பரில் வைத்து அரைமணி நேரம் புற ஊதா கதிர்களை பாய்ச்சி மீண்டும் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். அதன்பின் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கிய மைசீலியத்தை சேர்த்து இருட்டறையில் 15 - 20 நாட்கள் வளர்க்க வேண்டும். அறையின் வெப்பநிலை 25 - 28 டிகிரியாக பராமரிக்க வேண்டும். 15 நாட்களில் சோள ஊடகத்தில் பூஞ்சாண இழைகள் நன்கு பரவிவிடும். இது தான் தாய் வித்து.
இதை ஒரு மாதத்திற்குள் எடுத்து படுக்கை வித்து தயாரிக்க பயன்படுத்த வேண்டும். அதன் பிறகும் தாமதித்தால் காளான் வளர்ச்சியும், வீரியமும் குறைந்துவிடும். மதுரை விவசாய கல்லுாரி பயிர் நோய் இயல் துறை சார்பில் மாதந்தோறும் 15 ம் தேதி காளான் வளர்ப்பு கட்டணத்துடன் கூடிய பயிற்சி (Training) அளிக்கப்படுகிறது.
- ராமமூர்த்தி
- மனோன்மணி
உதவி பேராசிரியர்கள் பயிர் நோயியல் துறை மதுரை விவசாய கல்லுாரி
pathomac@tnau.ac.in
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மாடுகள் கன்று ஈனும் போது பராமரிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்!
ஆற்காடு அடுத்த கலவையில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு!
Share your comments