வானத்தைப் பார்த்து பருவநிலை அறிந்து பயிர் செய்த காலம் தற்போது இயலாத ஓர் விஷயம். இதனால் பருவ காலப் பயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே விஞ்ஞானத்தின் துணையோடு விவசாயம் செய்ய உழவர்களுக்கு உதவும் விதமாக ஏதேனும் ஒன்று செய்ய அரசு முயற்சி செய்ததன் பலனே 'உழவன் செயலி'. விவசாயிகள் வேளாண்மை நலத் திட்டங்களைப் பெறும் வகையில் இந்த உழவன் செயலி(uzhavan app) கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது.
நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் 'உழவன் செயலி'
ஆண்டிராய்டு மற்றும் ஐ-போன் இரண்டிலும் இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதுவரை சுமார் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு தகவல்களை மட்டுமே அளிக்கக்கூடியதாக இருந்த இந்தச் செயலி, தற்போது அவர்கள் முழுமையாகப் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
காலநிலைக்கேற்ப எந்த மண் வகைக்கு எந்த விதையைப் பயன்படுத்தலாம்? அது எங்கே கிடைக்கும்? பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இந்த செயலியில் சோதனை முறையில் சேர்க்கப்பட்டுள்ளது. நீண்ட ஆய்வுகளுக்கு பின்னரே, இத்தகவல்கள் அனைத்தும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உழவன் செயலியுடன் இணைந்த 'ஜெபார்ம் செயலி'
இதற்கிடையே, சமீப காலத்தில், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள மற்றொரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அது என்னவென்றால், உழவன் செயலியுடன் 'ஜெபார்ம்' என்னும் செயலியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விவசாயக் கருவிகள் தேவைப்படுவோர், அவற்றை வாடகைக்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்த வசதி மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விவசாயிகள் நேரடியாகப் பயன்பெற முடியும் என்பதால் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. டிராக்டர்கள் வைத்திருப்போர் அவற்றை இந்த செயலி மூலம் ஏழை விவசாயிகளுக்கு வாடகைக்குத் தருகின்றனர்.
உழவன் செயலியை உருவாக்கியவர் இவர்கள் தானாம்
விவசாயிகளுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும் இந்த செயலியை உருவாக்கியது ஐடி துணை இயக்குநர் பி.வெங்கடாசலபதி மற்றும் வேளாண் துறை அதிகாரி பி.ஆர்.சரவணன் ஆகியோர் தான். கூகுள், ஆப்பில் இச்செயலிக்கு 4.4 ரேட்டிங் தரப்பட்டுள்ளது.இந்தச் செயலியில் வானிலை அறிக்கைகள், விவசாயப் பொருட்கள் விலை நிலவரம், மானியம், பயிர் காப்பீடு, கடன் மற்றும் நிவாரணாம் உள்ளிட்ட தகவல்களையும் பெற முடியும். இது தவிர அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை வாங்கிட விரும்பும் விவசாயிகள் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது அரசு. இந்த செயலியில் பதிவு செய்வோருக்கு மாவட்டம், வட்டம் வாரியாக முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே வேளாண் இயந்திரங்கள் வாங்கிட மானியம் வழங்கப்படுமென கூறப்படுகிறது.
'உழவன் செயலி'-பயன்படும் விதம்
தமிழ்நாட்டு அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வேளாண் இயந்திரங்களை வாங்கிட விரும்பும் விவசாயிகள் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.
இந்த செயலியில் பதிவு செய்வோருக்கு மாவட்டம், வட்டம் வாரியாக முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே வேளாண் இயந்திரங்கள் வாங்கிட மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் மட்டுமின்றி, அனைவரும் இந்த செயலியினை பதிவிறக்கம் செய்துக்கொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம், உள்ளிட்ட விவரங்களை தெரிந்துக் கொண்டு, அவற்றை படிப்பறிவில்லாத விவசாயிகளுக்கு தெரியப் படுத்தலாம். வேளாண்மைத் திட்டங்களைப் பெறுவதற்கு உழவன் செயலி கட்டாயம் என்ற நிலை ஏற்படுவதால், அதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
விளைபொருள்களின் சந்தை விலை நிலவரம்
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருள்களுக்கேற்ற தகுதியான விலை பெறும் பொருட்டு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், ஏலத்தில் அன்றைய தேதியில் விற்பனையான விளை பொருள்களின் விலையை நிகழ்நிலை முறையில் தெரிந்துகொள்ளலாம். அதற்கேற்றாற்போல் தங்கள் விளைபொருள்களைக் கூடுதல் விலை கிடைக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்துச் சென்று பயனடையலாம். இச்செயலியை https://bit.ly/2HfRyLu என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.
இத்தகைய பல பயன்களை கொடுக்கும் 'உழவன் செயலி', வேளாண்மைத் திட்டங்களைப் பெறுவதற்கு கட்டாயம் என்ற நிலை ஏற்படுவதால், அதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இந்தச் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது, எப்படி செயல்படுத்துவது, அதிலுள்ள விவரங்களை எவ்வாறு பெறுவது என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாத நிலையில், இதுதொடர்பாக அரசு போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே, இந்தச் செயலியின் நோக்கம் முழுமையாக விவசாயிகளைச் சென்றடையும் என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.
M.Nivetha
nnivi316@gmail.com
Share your comments