நிலக்கடலை சாகுபடியில் அதிக செலவு பிடிப்பது விதைகள் தான். தரமான சான்று பெற்ற விதையைத் தேர்வு செய்வது அவசியம்.
கார்த்திகை பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் விதைக்கப்படுவது. கார்த்திகை பட்டத்துக்குள் விதைக்கும் போது போதிய மழை, சரியான தட்ப வெப்பநிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு (High Yield) வாய்ப்புள்ளது.
நன்கு திரட்சியான இனத்துாய்மை மற்றும் நடுத்தர பருமனுள்ள விதைகளில் 96 சதவீதம் புறத்தூய்மை கட்டாயம் இருக்க வேண்டும். பிறரக விதைகள் கலக்கக் கூடாது. பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் இல்லாமல் குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத்திறனும், அதிகபட்ச ஈரப்பதம் 9 சதவீதம் இருக்க வேண்டும்.
நோய்த் தடுப்பு முறை
மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டு, பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு 4 கிராம் உயிர் நோய்க் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். விதைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்தால் 30 நாட்களுக்கு பயிருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
நிலக்கடலையின் வளர்ச்சிக்கு வேதி உரங்களின் தேவை அதிகமாக இருப்பதால் மிக குறைந்த விலையில் கிடைக்கும் உயிர் உரங்களை விதையுடன் கலந்து விதைத்தால் உரச்செலவை குறைக்கலாம். மண்ணின் இயல்பையும் பாதுகாக்கலாம். எக்டேருக்கு தேவையான 125 கிலோ முதல் 160 கிலோ விதைப்பருப்புடன் 600 கிராம் ரைசோபியம் கலந்து விதைப்பதன் மூலம் நைட்ரஜனை (Nitrogen) பயிர்கள் நிலைப்படுத்தி தழைச்சத்து தேவையை குறைக்கிறது. 600 கிராம் பாஸ்போ பாக்டீரியாவை எக்டேருக்கு தேவையான விதைப்பருப்புடன் கலந்து விதைத்தால் பயிருக்குத் தேவையான மணிச்சத்து அளவு குறைகிறது.
விதை நேர்த்தி செய்யும் போது, விதைகள் உயிர் உரத்துடன் எளிதில் ஒட்டும் வகையில் அரிசி கஞ்சியில் சேர்த்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.
விதைப்பரிசோதனை
சாகுபடி செய்வதற்கு முன் விதைப் பரிசோதனை (Seed Test) செய்வது நல்லது. விதைக்காக உள்ள நிலக்கடலைக் காய்களில் 500 கிராம் எடுத்து அந்தந்த மாவட்ட விதைப் பரிசோதனை மையத்தை அணுகி பயன்பெறலாம்.
சிங்கார லீனா
விதைப் பரிசோதனை அலுவலர்
96775 31161
மேலும் படிக்க
Share your comments