கோவை மாவட்டத்தில் கோழிக்கொண்டைப் பூக்கள் சாகுபடி அதிகரித்திருப்பதால், மலர் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு மாறிவிட்டநிலையில், குறைந்த அளவிலான விவசாயிகளே மலர் சாகுபடியில் தொடர்கின்றனர்.
ஆனைமலை ஒன்றியத்தில் விவசாயிகள் தென்னை, நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிர்கள், வாழை, கோகோ, ஜாதிக்காய், பாக்கு, காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
ஆனால், சொற்ப அளவிலான விவசாயிகள் மட்டுமே, கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்கின்றனர். மற்ற வகை பூ சாகுபடி ஆனைமலையில் மேற்கொள்ளப்படுவது இல்லை. பெரும்பாலும் கோழிக்கொண்டைப் பூக்கள்தான்.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பரப்பு குறைந்திருந்த நிலையில், விவசாயிகள் ஆர்வத்தால், பூக்கள் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.பூக்கள் சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
15 ஆண்டுகளுக்கு முன், ஆனைமலை ஒன்றியத்தில் பல வகைப் பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.பூக்கள் சாகுபடியில் வருமானம் குறைவு என்பதால், இதனைக் கருத்தில்கொண்டு, மாற்றுப்பயிர் சாகுபடியை பின்பற்றுவதால், பூக்கள் சாகுபடி வெகுவாகக் குறைந்துள்ளது.
ஆனால், தற்போது, நன்மை செய்யும் பூச்சிக்களின் எண்ணிக்கை மற்றும், மகரந்த சேர்க்கையை அதிகரிக்க, சூரிய காந்தி, கோழிக்கொண்டை, செவ்வந்தி உள்ளிட்ட பூ வகைகளை விவசாயிகள் ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.
விற்பனை செய்வதற்காக வணிக நோக்கில், கோழிக்கொண்டை பூ மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. கோழிக்கொண்டைக்கு, மார்க்கெட்டில் தேவை உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி அதிகரித்து வருகிறது.
ஆனால், தோட்டக்கலைத்துறை சார்பில் எவ்வித, மானிய திட்டமும் செயல்படுத்தப்படுவது இல்லை. மாவட்டத்தின் மற்ற ஒன்றிய பகுதிகளுக்கு வழங்குவதைப்போல, ஆனைமலை ஒன்றியத்துக்கும், பூக்கள் சாகுபடி பரப்பை அதிகப்படுத்த, மானிய திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். மானிய திட்டம் கிடைத்தால், பூக்கள் சாகுபடி அதிகரித்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மேலும் படிக்க..
Share your comments