சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலக மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சேலம் மாவட்டம் மேட்டூர், திப்பம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலவர் பழனிசாமி கலந்துகொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சேலம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலுள்ள விவசாயிகள், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்iயான, மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் வெள்ள உபரி நீரை வறண்ட பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்களில் நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையினை நான் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம்
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, இந்த வறட்சியான பகுதியில், இறைவனின் அருளால் துரிதமாக, மிகச் சிறப்பாக பணிகள் நடைபெற்று, குறுகிய காலத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 15.7.2019 அன்று சட்டமன்றத்திலே பொதுப்பணித்துறையின் மானிய கோரிக்கையில் இந்தத் திட்டத்தை நான் அறிவித்தேன். இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை. இதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 565 கோடி. மேலும், இதற்கான நிலத்தினை கையகப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு வேகமாக இந்தப் பணிகளை தொடங்கினோம்.
4238 ஏக்கர் பாசன வசதி பெறும்
மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீரை திப்பம்பட்டியிலுள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் நீரேற்று செய்து, அதன் மூலம் வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையம், கன்னந்தேரி துணை நீரேற்று நிலையம் மூலம் 42 ஏரிகளுக்கும், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து நங்கவள்ளி வழியாக 31 ஏரிகளுக்கு நீர் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களைச் சேர்ந்த 8 ஒன்றியங்களிலுள்ள 40 கிராமங்களில் உள்ள 79 ஏரிகள் மூலம் 4,238 ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும், ஏறத்தாழ 38 கிராமங்களுக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஏரிகளுக்குத் தேவைப்படும் மொத்த நீர் 1/2 டி.எம்.சி. வெள்ள உபரி நீர் திப்பம்பட்டியில் உள்ள பிரதான நீரேற்று நிலையத்திலிருந்து 30 நாட்களுக்கு தினந்தோறும் வினாடிக்கு 214 கன அடி வீதம் நீரேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டப்பணிகள் 6.5.2020 அன்று தொடங்கப்பட்டு, முழுவீச்சில் செயல்பட்டு, விவசாய மக்களின் நலன் கருதி மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் பணி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
ரூ.62.63 கோடியில் மற்ற திட்டங்களும் தொடங்கிவைப்பு
அதே போல, இன்றைய தினம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2 புதிய திட்டப் பணிகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக 21 புதிய திட்டப் பணிகளுக்கும் என மொத்தம் 5.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு இன்று என்னால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறையின் மூலம் முடிவுற்ற 2 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் இருப்பாளை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 450 ஊரக குடியிருப்புகளில் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் வசதிகள்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் எடப்பாடி நகராட்சியில் முடிவுற்ற 2 பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பேரூராட்சி துறை சார்பில் முடிவுற்ற 3 பணிகள், ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மாவட்ட ஊராட்சி மையம் சார்பில் முடிவுற்ற 23 பணிகள், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் சார்பில் முடிவுற்ற 2 பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் முடிவுற்ற 4 பணிகள்.
கூட்டுறவுத் துறையின் சார்பில் தோரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடம் என மொத்தம் ரூபாய் 62 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் 36 முடிவுற்ற பணிகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிக இழப்பீட்டை பெற்றுத்தந்த தமிழக அரசு
வறட்சி வந்த போது ஏறத்தாழ 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம். இதுவரை தமிழக வரலாற்றில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய சரித்திரம் கிடையாது. அந்தச் சரித்திரத்தையும் அதிமுக அரசுதான் செய்துள்ளது.
10 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் என பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே பயிர்க் காப்பீடு திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 9,257 கோடி ரூபாய் என அதிக இழப்பீட்டைப் பெற்றுத் தந்த அரசாங்கம் தமிழ்நாடு அரசாங்கம்தான். விவசாயிகள் ஏற்றம் பெறுகிற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
திருவாரூர் விவசாயிகள் எதிர்ப்பு
இந்நிலையில், மேட்டூரிலிருந்து சரபங்கா திட்டத்துக்காக உபரிநீரை எடுத்துச் சென்றால், டெல்டா பகுதியின் விவசாயம் பாலைவனமாக மாறும் சூழல் ஏற்படும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர். டெல்டா பகுதியிலுள்ள விளைநிலங்கள் செழிப்பாக இருக்க வேண்டுமென்றால், மேட்டூர் நீரை இதர திட்டங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
நெல்லில் பழ நோயை எப்படித் தடுக்கலாம்!
இயற்கை விளைப்பொருட்களை இனிதே வாங்கிட "நம்ம திருச்சி இயற்கை விவசாய சந்தை"!!
Share your comments