நெல் பயிரிடும் முன் பசுந்தாள் விதைகளை பயிரிட்டு பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் உரமாகி வளம் தரும். இவற்றை விதையாகவும் உற்பத்தி செய்து ஓராண்டு வரை சேமித்து வைக்கலாம். விதை உற்பத்திக்கு ஒரு எக்டேருக்கு 20 கிலோ விதை தேவை. விதையுடன் 5 பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கலவை, ஒன்றரை லிட்டர் ஆறிய கஞ்சி அல்லது மைதா கஞ்சியுடன் சேர்த்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம்.
பசுந்தாள் உற்பத்தி (Green Manure Production)
விதை உற்பத்திக்கு பயிர் இடைவெளி அதிகம் தேவை. 45க்கு 20 செ.மீ. இடைவெளி விட வேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழுஉரம் இடுவதால் பயிரின் வளர்ச்சியும் விதைப் பிடிப்பும் அதிகரிக்கும். 20:40:20 கிலோ அளவில் தழை மணி, சாம்பல் சத்துக்களை இட வேண்டும்.
30 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் தருணம் மற்றும் விதையின் முதிர்ச்சி பருவத்தில் நீர் அவசியம். ஒரு எக்டேருக்கு 2.5 லிட்டர் பென்டி மெத்தலின் பாசலின் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். விதைத்த 10வது நாள் ஒரு களை எடுக்க வேண்டும். பூக்கும் பருவத்திற்கு முன், பூக்கும் பருவம், காய்பிடிப்பின் போது மற்றும் அறுவடைக்கு முன் விதைப்பயிரிலிருந்து வேறுபட்டிருக்கும் கலவன் செடிகளை நீக்க வேண்டும்.
விதைத்த 40 மற்றும் 60வது நாட்களில் ஒரு சதவீத சல்பேட் ஆப் பொட்டாஷ் கரைசலை காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். பூக்கும் பருவத்தில், காய் புழுக்களின் சேதாரம் அதிக பொக்கு விதைகளை உருவாக்கி மகசூலை பாதிக்கும். இதை கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும். விதைப் பயிரை 150 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும்.
காய்கள் முதிர்ந்தபின் காயுடன் கூடிய பாதி செடியை அறுவடை செய்து களத்தில் காய விட வேண்டும். மூங்கில் குச்சியால் காய்ந்த செடிகளை அடித்து விதைகளைத் துாற்றி சுத்தம் செய்து 8 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும். நிறம் மாறிய விதைகளை நீக்கியபின் விதைக்காக பயன்படுத்தலாம்.
எக்டேருக்கு 400 கிலோ விதை கிடைக்கும். பசுந்தாள் உர விதைகள் இந்திய விதைச்சான்று தரக்கட்டுப்பாட்டின் படி 98 சதவீத துாய்மை, 80 சதவீத முளைப்புத்திறன் கொண்டிருக்க வேண்டும். பிற பயிர்களை போன்று பசுந்தாள் உரப்பயிர் விதைகளின் சேமிப்பிலும் கவனம் தேவை. சரியான முறையில் சாக்குப்பைகளில் பாதுகாத்தால் ஓரிரு ஆண்டுகள் சேமிக்கலாம்.
- சுஜாதா, பேராசிரியர்
நிலவரசி, ஆராய்ச்சியாளர் விதை அறிவியல் மற்றும் நுட்பவியல்துறை,
வேளாண்மைக் கல்லுாரி, மதுரை, 94437 90200
மேலும் படிக்க
உவர்நிலத்தை வளமான விளைநிலமாக்கும் அதிசய செடி!
விவசாயத்தில் கோமியப் பயன்பாடு: உத்தரவு பிறப்பித்தது சத்தீஸ்கர் அரசு!
Share your comments