வரும் செப்டம்பர் மாதம் வரை கொப்பரை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொப்பரைகளை விவசாயிகள் விற்பனை செய்து பயனடையலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2020 - 21ஆம் ஆண்டில் விவசாயிகள் உற்பத்தி செய்த கொப்பரைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் நேரடியாகப் பயனடைந்ததுடன், கொப்பரையின் சந்தை விலை உயா்ந்ததால், அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் லாபகரமான விலை கிடைத்தது.
4,200 டன் கொள்முதல் இலக்கு
இதேபோல, 2021 - 22 ஆம் ஆண்டு மீண்டும் தென்னை விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக, அரைவைக் கொப்பரை 4,200 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கொப்பரை - ஈரப்பதம் 6%
அரைவைக் கொப்பரைக்கு நிா்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வகையில் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 6 சதவீதம் இருக்குமாறு, நன்கு காய வைத்து கொண்டு வர வேண்டும். அரைவைக் கொப்பரை கிலோவுக்கு ரூ. 103.35 வீதம் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான கிரயம் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.
செப்டம்பர் வரை கொள்முதல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் செப்டம்பா் வரை கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடக் கண்காணிப்பாளரை அணுகி, பதிவு செய்து தங்களது கொப்பரையை விற்பனை செய்து பயனடையலாம்.
மேலும் படிக்க...
வயல்களில் பதுங்கியுள்ள எலிகள்- தந்திரமாகக் கையாள்வது எப்படி!
சந்தைப் போட்டி இல்லாத சாத்துக்குடி சாகுபடி! விவசாயிகள் ஆர்வம்!
Share your comments