நெல்லோ தானியமோ நிலத்தின் மண்ணை ஆய்வு செய்து, மண் மற்றும் பயிர் தேவைக்கேற்ப உரமிடுவதே நல்லது. மண் ஆய்வு செய்யாத விவசாயிகள் ஏக்கருக்கு 5 டன் தொழு உரத்துடன் 50 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து இடுவது பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
உரம்
ஊட்டச்சத்தை அதிகரிக்க ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தை நடவுக்கு முன் தொழு உரத்துடன் சேர்த்து இட வேண்டும். நன்கு மட்கிய தொழு உரம், மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட்டு நட வேண்டும்.
தற்போது நடவு முடிந்து நெல் வளர்ச்சி பருவத்தில் இருக்கும். வானிலை மேகமூட்டத்துடன் மழை பெய்வதாலும் தழைச்சத்து மற்றம் சாம்பல் சத்து சரியான முறையில் மேலாண்மை செய்வது அவசியம். தேவையில்லாமல் தழைச்சத்தை இடக்கூடாது. பயிரின் தேவையை அறிந்து தழைச்சத்து இடுவதற்கு இலை வண்ண அட்டையை பயன்படுத்த வேண்டும்.
இலை வண்ண அட்டை
நட்ட 14 நாளிலிருந்து பூக்கள் வரும் வரை வாராந்திர இடைவெளியில் இலை வண்ண அட்டை அளவுகள் பதிவு செய்ய வேண்டும். இலை வண்ண அட்டையை இலையின் நடுப் பாகத்தில் அளவிட வேண்டும். குறைந்தது 10 செடிகளில் ஆரோக்கியமான இலைகளிலிருந்து காலை 8--10 மணிக்குள் அளவு எடுக்க வேண்டும்.
Also Read | சிறை வளாகத்தில் இயற்கை விவசாயம்: உற்பத்தியும் அதிகரிப்பு!
10 அளவுகளில் 6 அளவுகள் இலை வண்ண அட்டை அளவு 3க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 20 கிலோ யூரியா இட வேண்டும். தழைச்சத்து தேவையை அறிந்து கொள்ள 7 நாட்களுக்கு ஒருமுறை இலை வண்ண அட்டை அளவு பூக்கும் வரை எடுக்க வேண்டும். இலை வண்ண அட்டை பயன்படுத்தும் போது தேவைக்கேற்ப தழைச்சத்தை பராமரிக்க உதவும். மேலும் மகசூலை அதிகரிப்பதற்கும் உதவுவதுடன் பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் குறைப்பதிலும் உதவுகிறது.
ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ சாம்பல்சத்தை (33 கிலோ பொட்டாசியம் உரம்) நான்காக பிரிக்க வேண்டும். தலா எட்டு கிலோ வீதம் அடியுரமாக, நடவுக்கு பின் 20-25 நாள், 40-45 வது நாள் மற்றும் 60-65 நாள்களில் இட வேண்டும். தழைச்சத்து தேவையை இலை வண்ண அட்டை மூலம் கண்டறிந்து தேவையான ஊட்டச்சத்துக்களை நெல் பயிருக்கு இட்டு நிறைவான மகசூல் பெறலாம்.
கண்ணன், உதவி பேராசிரியர்
சண்முகசுந்தரம், பேராசிரியர்
மண் மற்றும் சுற்றுப்புறச்சூழலியல் துறை,
வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மதுரை - 625 104.
99764 06231
மேலும் படிக்க
Share your comments