பூக்கும் கிளைகளை கண்டறிந்து பருவமழை காலத்தில் மல்லிகை நடவு செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம் என்கின்றனர் சேலம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் மாலதி, ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள்.
மல்லிகை உற்பத்தி
மல்லிகை உற்பத்தி (Jasmine Production) குறித்து அவர்கள் கூறியதாவது: குண்டுமல்லி அதிக மழையை தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிர். நிலத்தில் நீர் தேங்கினால் செடியின் வளர்ச்சி குறைந்து விடும். ஜூன் முதல் நவம்பர் வரை பதியன் மூலம் நடவு செய்யலாம். இரண்டு முறை நிலத்தை ஆழமாக உழுது குழிக்கு 20 கிலோ தொழு உரத்தை மண்ணுடன் கலந்து நிரப்ப வேண்டும். எக்டேருக்கு சாதாரணமாக 6400 பதியன்களும் அடர் நடவில் 8333 பதியன்கள் தேவைப்படும்.
நன்றாக வேர்விட்ட பதியன்களை மழைக்காலத்தில் குழியின் மையத்தில் நடவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி குளோர்பைரிபாஸ் கலந்து ஊற்றினால் கரையானால் ஏற்படும் சேதத்தை குறைக்கலாம். நிலத்தில் வேர் பிடிக்கும் வரை வாரத்திற்கு 2 முறையும் அதன் பின் வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
மல்லிகை செடிக்கு 5 கிலோ தொழு உரத்துடன் 30 கிராம் தழைச்சத்து, தலா 60 கிராம் மணிச்சத்து, சாம்பல் சத்துக்களை ஜூன், ஜூலையிலும் இதேபோல நவம்பர், டிசம்பரிலும் மண்ணோடு கலந்து விட வேண்டும். துத்தநாக சல்பேட் 0.25 சதவீதம், மக்னீசியம் சல்பேட், பெரஸ் சல்பேட் தலா 0.5 சதவீதம் கலந்து பூப்பதற்கு முன் தழைகளின் மேல் தெளித்தால் மகசூல் (Yield) அதிகரிக்கும்.
மாதம் ஒரு முறை 3 சதவீத பஞ்சகவ்யா, 0.4 சதவீத ஹியூமிக் அமிலம் கலந்து தெளித்து வளர்ச்சியை ஊக்கப்படுத்தினால் சாகுபடி செலவை குறைக்கலாம். நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். மாதம் ஒருமுறை களை எடுக்கும் போது மண்ணை லேசாக கிளறிவிடுவதன் மூலம் பின்செய் நேர்த்தி, களை நிர்வாகத்தை ஒருங்கே செய்து சாகுபடி (Cultivation) செலவை குறைக்கலாம்.
மகசூல்
செடிகள் நட்ட முதலாண்டிலேயே பூக்க ஆரம்பிக்கும். இரண்டாமாண்டில் இருந்து சீரான மகசூல் பெறலாம். சராசரியாக எக்டேருக்கு 8 - 9 டன் அளவும், துல்லியப் பண்ணைய முறையில் 12 டன் வரை மகசூல் கிடைக்கும்.
மல்லிகை செடியில் சில கிளைகள் பூ எடுக்காமல் தழைகளையே உற்பத்தி செய்யும். திடீர் மரபணு மாற்றத்தால் பூக்காமல் போய்விடும். எனவே பூ எடுக்காத கிளைகளை பதியன் முறைக்கு பயன்படுத்தக்கூடாது. ஒரு முறை பதியன் இட்டால் 15 ஆண்டுகள் பலன் தரும் என்பதால் பூக்கும், பூக்காத கிளைகளை கண்டறிந்து புதிய கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
தொடர்புக்கு 97877 13448
மேலும் படிக்க
கலப்படமில்லாத உணவே விவசாயிகளின் சாதனை: அசத்திய ராம்குமார்!
நெற்பயிரில் வளர்ச்சியை அதிகப்படுத்தி களைகளை கட்டுப்படுத்தும் அசோலா!
Share your comments