மிளகாய் வற்றலுக்கு நடப்பாண்டு, குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரம் வரைக் கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU) விலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், வாசனை மற்றும் நறுமணப் பயிர்களின் மொத்தப் பரப்பளவில், மிளகாய் வற்றல் சுமார் 18 சதவீதம் பங்களிக்கின்றது. ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை மிளகாய் (Red Chilli) பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும். இம்மாநிலங்கள் இணைந்து மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் 93 சதவீதம் பங்களிக்கின்றன.
மிளகாயில் உள்ள தாது சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள், சமையல் தேவைகள் மற்றும் நிறமேற்றி ஆகிய காரணங்களால் மருந்து மற்றும் உணவு தொழிற்சாலைகளில் (Food Factories) பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது. மிளகாயில் சோடியம் மற்றும் கொழுப்பின் அளவு குறைவாகவும், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் போலிக் அமிலம் அளவு அதிகளவிலும் உள்ளது.
75 சதவீதம்
இந்தியாவின் மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் 75 சதவீதம் நம் நாட்டிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. சீனா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அதிகளவு தரமான மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்திய மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மை காரணமாக வணிகத்தில் முக்கியபங்கு வகிக்கின்றது. ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து வழக்கமான வரத்து மற்றும் குளிர் சேமிப்பகத்தில் குறிப்பிடத்தக்க இருப்புகள் இருப்பதால் வரும் மாதங்களில் மிளகாய் வற்றல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் மிளகாய் பயிரிடப்படுகின்றது. சம்பா மற்றும் முண்டு வகை இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்படி அறுவடையின் போது (பிப்ரவரி’2021) தரமான (சம்பா) மிளகாய் வற்றலில் சராசரி பண்ணை விலை குவிண்டாலிற்கு ரூ.8500/- முதல் ரூ.9000/- வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குண்டூர் வர்த்தகர்களின் இருப்பிலிருந்து பெறப்படும் மிளகாய் வற்றலைப் பொருத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்-641 003
தொலைபேசி -0422-2431405 தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்ப விவரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
வாசனை மற்றும் தோட்டக்கலை பயிர்கள்
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோயம்புத்தூர்-641 003
தொலைபேசி – 0422 -6611284 தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
விவசாயத்தின் முதுகெலும்பான தோட்டத்துத் தேவதைகள் யார் தெரியுமா? விபரம் உள்ளே!
ஸ்மார்ட் பயிர் சாகுபடிக்கு மேகதூது செயலி- வானிலை முன்னறிவிப்புகளைத் தெரிந்துகொள்ளலாம்!
Share your comments