சில தினங்களுக்கு முன்பு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டத் தக்காளி தற்போது கிலோ 100 ரூபாயை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் அதிர்ச்சி (People are shocked)
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இந்த சூழலில் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருவது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
கிலோ ரூ.15 (Rs.15 per kg)
குறிப்பாக தக்காளியின் விலை கிட்டதட்ட ஐந்து மடங்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 15 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ 80 ரூபாயைத் தாண்டியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சாகுபடி பாதிப்பு (Impact on cultivation)
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 30 ரூபாய்க்கும், திருச்சியில் 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கோயம்புத்தூர், தருமபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகஅளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் திடீர் திடீரென்று மழை பெய்து வருகிறது. இதனால் செடிகளிலேயே தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் அதிர்ச்சி (Farmers shocked)
சந்தைக்கு தக்காளி வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால், அதன் விலைக் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், தக்காளிப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழையால் விலை ஏற்றம் (Rising prices due to rains)
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் தக்காளி வரத்து குறைந்து, விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி வட இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகியவற்றிலும் திடீர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மெட்ரோ நகரங்களில் தக்காளி விலை ஏற்றம் கண்டிருப்பதை பார்க்க முடிகிறது. கொல்கத்தாவில் ஒரு கிலோ தக்காளி விலை 72 ரூபாயாக அதிகரித்துள்ளது. சிம்லாவில் எதிர்பார்க்காத நேரத்தில் பெய்து வரும் மழையால் 60 சதவீத தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி (Shock)
இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தற்போது கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் தக்காளி அறுவடை செய்யும் காலமாக உள்ளது. அதேநேரத்தில் தக்காளியின் அதிரடி விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க...
தரிசு நில மேம்பாட்டு மானியத் திட்டம்-ஹெக்டேருக்கு ரூ.13,000!
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!
Share your comments