ஜான் டீரே (John Deere) டிராக்டர்களில் செயற்கைக்கோள் இணைய வசதியினை கொண்டு வர எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் (SpaceX ) ஸ்டார்லிங்குடன் (Starlink) கைக்கோர்க்க உள்ளதாக வெளியான தகவல் டெக் உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டிராக்டர் மற்றும் வேளாண் இயந்திரங்கள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக கருதப்படும் ஜான் டீரே மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் உடன் சமீபத்தில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையத்தை டிராக்டர்கள் மற்றும் விவசாய இயந்திரங்களில் ஒருங்கிணைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என கருதப்படுகிறது.
எந்த நாடுகளுக்காக இந்த ஒப்பந்தம்?
இந்த நடவடிக்கையானது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் விவசாயிகளுக்கு டிராக்டரில் அதிவேக இணைய இணைப்பை வழங்க இயலும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பயனடைய இருப்பது, அமெரிக்கா மற்றும் பிரேசிலின் கிராமப்புறங்கள் தான். மேற்குறிப்பிட்ட நாடுகளின் கிராமப்புறங்களிலுள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த ஒப்பந்தம்.
கிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களில் குறிப்பிடத்தக்க பகுதி போதுமான இணைய அணுகல் இல்லாத சூழ்நிலை தான் தற்போது வரை தொடர்கிறது. ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், இந்த ஒப்பந்தம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். டிஜிட்டல் முறையில் விவசாயத் தொழில்நுட்பங்களை விவசாயிகள் முழுமையாக அறிந்துக்கொள்ள இந்த நடவடிக்கை உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இணைய வசதி கிடைக்காத விளைநிலங்கள்:
அமெரிக்காவில் ஏறக்குறைய 30% விவசாய ஏக்கர் நிலமும், பிரேசிலில் 70% நிலமும் இணைய இணைப்பு இல்லாத சூழ்நிலையில், டிராக்டர் நிறுவனத்துடனான ஸ்டார்லிங்க் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் விவசாயத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜான் டீரே நிறுவனம் தொடர்ச்சியாக டிஜிட்டல் விவசாயத் தொழில்நுட்பங்களை தங்களது இயந்திரங்களுடன் இணைத்து வரும் நிலையில், இணைய சேவை இல்லாத பகுதிகளில் விற்பனையில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் சரிவர இணையம் கிடைக்காத பகுதிகளிலுள்ள விவசாயிகளால் கருவிகளைக் கண்காணித்தல், சரிசெய்தல், பயிர்கள் மற்றும் மண் பற்றிய துல்லியமான தரவுகளைச் சேகரிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஏன் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம்?
ஸ்டார்லிங்க் உடனான ஒப்பந்தம் ஜான் டீரே நிறுவனத்தின் டிஜிட்டல் விவசாயத் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் என கருதப்படுகிறது. எட்டு மாதங்களில் ஜான் டீரே பல்வேறு செயற்கைக்கோள் விருப்பங்களை சோதித்த பிறகு ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரடுமுரடான மற்றும் தூசி நிறைந்த சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்டார்லிங்க் ஆண்டனாக்கள், வாகன வண்டிகளின் உச்சியில் நிறுவப்பட்டு, இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் நம்பகமான இணைய சேவையினை உறுதி செய்யும் என்பதால், இந்த ஒப்பந்தம் ஜான் டீரே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என டெக் உலகில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read also:
ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine
அண்ணாந்து பார்க்க வைக்கும் டாப் 3 உயரமான மரங்கள் இதுதான்- எங்க இருக்கு?
Share your comments