
யூரியா தட்டுப்பாடு காரணமாக, பிற உரங்களை வாங்கினால்தான் யூரியா வழங்கப்படும் எனத் தனியார் உரக் கடை உரிமையாளர்கள் நிர்பந்திப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
2.50 லட்சம் ஏக்கர்
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட டெல்டா பகுதிகளிலும், விருத்தாசலம், கம்மாபுரம், அண்ணாகிராமம், கடலுார், குறிஞ்சிப்பாடி, மங்களூர், நல்லுார் உள்ளிட்ட டெல்டா அல்லாத பகுதிகளிலும், ஆண்டு தோறும் மே, ஜூன் மாதங்களில் 2.50 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
நாற்று நடவு
அதன்படி, கடந்த ஒரு மாதமாக விருத்தாசலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், ராஜேந்திரப்பட்டினம், பெண்ணா டம் உள்ளிட்ட பகுதிகளில் நடவு பணி தீவிரமாக நடைபெற்றது. இத்தகைய நாற்று நடும் பணிக்கு, விவசாயிகள் அடி உரமாக அதிகளவு யூரியா பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில், விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் யூரியா வாங்கச் சென்றால், இருப்பு இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர்.
நிர்பந்தம்
மேலும், யூரியா இருப்பு வைத்துள்ள சில தனியார் கடைகளில், பொட்டாஷ், டி.ஏ.பி., போன்ற உரங்களை வாங்கினால்தான், யூரியா கொடுப்போம் என கூறி வருகின்றனர். இதேநிலை தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் நீடிக்கிறது.இதனால், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
கொள்ளை விலை
இது குறித்து பரவளூர் விவசாயி தனவேல் கூறுகையில், நான் 6 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்துள்ளேன். நடவு பணிக்கு முன் நிலத்தினை உழுது அதில் யூரியா, டி.ஏ.பி.,உரங்களை இட்டு, நடுவு பணியில் ஈடுபடுவோம். மேலும், பயிர் பச்சை கட்டுவதற்கு அடுத்த ஒரு மாதத்தில் இரண்டு முறை யூரியா இட வேண்டும்.
ஆனால், தற்போது விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் யூரியா மூட்டைகளை கேட்டால், டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்களை வாங்கினால், அதனுடன் யூரியா தருகிறோம் என கூறுகின்றனர். மேலும், ஒரு சில தனியார் கடைகளில் ரூ.350க்கு விற்க வேண்டிய 50 கிலோ யூரியா மூட்டையை,ரூ.550க்கு விற்று கூடுதல் லாபம் பார்க்கின்றனர்.
அரசு தலையிடுமா?
தோட்டப்பயிர்கள் மற்றும் நெல், கரும்பு போன்ற பயிர்களின் வளர்ச்சிக்கு யூரியா முக்கிய தேவை. யூரியா மூட்டை வாங்க மட்டுமே பணம் இருப்பு வைத்துள்ள நிலையில், எங்களுக்கு தற்போது தேவைப்படாத உரங்களை கட்டாயமாக வாங்கச்சொல்வது வேதனையாக உள்ளது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு யூரியா கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
மேலும் படிக்க...
Share your comments