திருப்பூர் மாவட்ட விவசாயிகள் விதைப்பண்ணை அமைக்க முன்வரவேண்டும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாயி அமைத்திருந்த கோ 8 இரக பாசிப்பயறு விதைப்பண்ணைத் திடலை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், பி.ஆ. மாரிமுத்து, கள ஆய்வு செய்தார்.
கோ 8 ரகம் (Go8 type)
கடந்த 2013ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கோ 8 இரகமானது அனைத்து பட்டங்களுக்கும் ஏற்றது. 55 முதல் 60 நாட்களுக்குள் வளர்ந்து இரண்டரை ஏக்கர் பரப்பிற்கு 850 கிலோ மகசூல் கொடுக்கும். ஒரு செடிக்கு, 20 முதல் 25 காய்களும், ஒரு காய்க்கு, 10 முதல் 14 விதைகள் இருக்கும்.
காய்கள் படகு போன்ற வடிவமைப்புடன், விதைகள் மங்கிய பச்சை நிறத்துடன் உருளை போன்ற வடிவத்தில் காணப்படும்.
அகற்றுதல் அவசியம் (Removal is necessary)
ஆயிரம் தானியங்களின் எடை 35 முதல் 45 கிராம் இருக்கும். இந்த அறிகுறிகள், குணாதிசயங்கள் இல்லாத செடிகளை விதைபண்ணையிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும்.
பிற கலவன் செடி மற்றும் குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் 0.1 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். அந்த வகையில் பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு ஆகியவை, விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு, உரிய கொள்முதல் விலை, மற்றும் விதை உற்பத்தி மானியம் கிலோவுக்கு, ரூ.25 கூடுதலாகக் கிடைக்கும்.
தொடர்புக்கு (Contact)
விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் பல்லடம் வேளாண்துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, பல்லடம், விதைச்சான்று அலுவலர், ப.கணேசன் மற்றும் உதவி விதை அலுவலர் முத்துசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க...
சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!
Share your comments