1. விவசாய தகவல்கள்

காய்கறி நாற்று உற்பத்தி: கோடைமழை நடவுக்கு தயாராகும் விவசாயிகள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Vegetable seedling production

கோடை மழை துவங்கியுள்ள நிலையில், காய்கறி சாகுபடிக்காக பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணி தீவிரமடைந்துள்ளது. விவசாயிகளும் கோடை உழவு பணியில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். உடுமலை பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், காய்கறி பயிர் சாகுபடி பிரதானமாக உள்ளது. குறைந்த கால சாகுபடி, மகசூல், வருவாய் என்ற அடிப்படையில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.
சாகுபடிக்கு தேவையான தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, காலிப்ளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்கள், தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக, உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி நாற்று (Vegetable Plant)

உடுமலை சுற்றுப்பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் உள்ளன.ஒவ்வொன்றும், தலா, 7 லட்சம் முதல் 10 லட்சம் நாற்றுக்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். நாற்று வகைக்கு ஏற்ப, 20 முதல் 30 நாட்கள் வரை வளர்ந்த நாற்றுக்களை வாங்கி, விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். தக்காளி நாற்று, 50 முதல் 80 பைசாவுக்கும், மிளகாய், 70 முதல் 80 பைசாவுக்கும், கத்தரி, 50 பைசாவுக்கும், காலிப்ளவர், 70 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாகுபடி காலம் குறைவு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களினால், விவசாயிகள் நாற்றுக்களை வாங்கி, நேரடியாக நடவு செய்து வருகின்றனர்.

கோடை மழை (Summer Rain)

கடந்த இரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது உடுமலை சுற்றுப்பகுதிகளில் கோடை கால மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், இறவை பாசனத்திலுள்ள விவசாயிகள், குறுகிய கால சாகுபடியான காய்கறி நடவில் ஆர்வம் காட்டி வருவதால், நாற்றுப்பண்ணைகளில் விற்பனை அதிகரித்து, நாற்றுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடுமலை பகுதிகளில் வழக்கமான காய்கறி சீசனுக்கு தயாராகும் வகையில், நாற்றுப்பண்ணைகளில் விதை நடவு, நாற்று உற்பத்தி பணியும் தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக, கோடை கால மழையை பயன்படுத்தி, விவசாயிகள் உழவுப்பணிகள் மேற்கொள்வர். அதற்கு பின் கிடைக்கும் தென்மேற்கு பருவ மழை காலம், காய்கறி பயிர் சாகுபடி சீசன் காலமாக உள்ளது.

இதனால், கோடை உழவுப்பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். இதற்காக நிலங்களை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாகுபடிக்கு தேவையான காய்கறி உட்பட பல்வேறு நாற்றுகளை பெறுவதற்கு நாற்றுப்பண்ணைகளில் முன்பதிவு செய்யத் துவங்கியுள்ளனர். தற்போது, தக்காளி விலை, 14 கிலோ கொண்ட பெட்டி, 250 ரூபாய் வரை விற்று வருவதால், அதிகளவு விவசாயிகள் தக்காளி சாகுபடி மேற்கொள்ளவும், அடுத்ததாக மிளகாய், கத்தரி, காலிப்ளவர் சாகுபடி இருக்கும் வாய்ப்புள்ளது.

தக்காளி உற்பத்திநாற்றுப்பண்ணையாளர்கள் கூறியதாவது: தற்போது கோடை கால மழை துவங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி, நிலங்கள் உழவுப்பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நல்ல மழை கிடைத்து வரும் நிலையில், அடுத்து துவங்கும் தென் மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து, காய்கறி சாகுபடி மேற்கொள்ள ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது. நாற்றுப்பண்ணைகளில், குழித்தட்டுகளில் காய்கறி விதை நடவு செய்து, 20 முதல், 25 நாட்கள் வளர்ந்த நாற்றுக்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதனை, வயல்களில் நடவு செய்யும் போது, ஜூன்-ஜூலை மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகளவு இருக்கும் என்பதால், நாற்றுப்பண்ணைகளில், 70 சதவீதம் தக்காளி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

மிளகாய், 20 சதவீதமும், கத்தரி, காலிப்பிளவர், 10 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில், அதிக மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் விரைவில் அழுகாமல் தாங்கும் திறனுள்ள தோல்களை கொண்ட காய் என, புதிய ரக தக்காளி விதைகள் நடவு செய்து, நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி, நல்ல மகசூலை பெற வேண்டும்.

மேலும் படிக்க

விவசாயப் பயிர்களுக்கு ட்ரோன் வழியாக மருந்து தெளிப்பு!

வாடிய செடி, மரங்களுக்கு புத்துயிர் ஊட்டும் மாமனிதர்!

English Summary: Vegetable seedling production: Farmers preparing for summer planting! Published on: 14 April 2022, 06:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.