காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 27ம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடரும் கனமழை (Continuing heavy rain)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கடந்த 5-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. வெளுத்து வாங்கிய அதி கனமழையால் சென்னை உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.
வெள்ளக்காடாக மாறின (Turned into a floodplain)
தொடர்ந்து கடந்த 15-ந் தேதி உருவான மற்றொரு குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழையை கொடுத்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை (Flood risk warning)
கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் இதுவரையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.
நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஏரி, குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் நிரம்பியதால் பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தாழ்வானப் பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை மற்றும் தென் தமிழகம் நோக்கி கடந்து வரும் என்று கணிக்கப்படுகிறது.
மிக கனமழை எச்சரிக்கை (Very heavy rain warning)
இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் 3.1 கி.மீட்டர் உயரத்துக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இது இலங்கையை கடந்து தெற்கு தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று முதல் 27ம் தேதி வரை மிக கன மழையை எதிர்பார்க்கலாம். 25, 26, 27-ந்தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!
Share your comments