கோடை காலத்தில் தென்னையை பாதுகாப்பது அவசியம். வறட்சி காலத்தில் தென்னைக்கு பாசனம் செய்யும் நீர் பயிர்களுக்கு முழுமையாக கிடைக்காமல் ஆவியாகி விடும். பாத்தியின் மேல் மூடாக்கு அமைப்பதே சிறந்த வழி. ஒவ்வொரு பாத்திக்கும் 15 தென்னை ஓலைகள், தேங்காய் மட்டை அல்லது தென்னை நார்க்கழிவுகளை பரப்பி, சூரியஒளி படுவதை தடுப்பதன் மூலம் நீர் ஆவியாவதை குறைக்கலாம். ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைக்கலாம்.
தென்னை நீர் மேலாண்மை (Coconut Water Management)
மூடாக்கு அமைக்கும் போது கரையான் வளர்வதற்கு வாய்ப்புள்ளதால் ஜீவாமிர்தத்தில் சிறிது வேப்பெண்ணெய், சாம்பல் கலந்து தெளிக்கலாம். இது தென்னை மரத்திற்கு தேவையான நுண்ணுயிர் வளர்ப்பு ஊக்கியாகவும் பயன்படும்.
மரங்கள் பட்டுப்போவதை தவிர்க்க சொட்டுநீர்ப் பாசன முறையில் மரத்திற்கு தினமும் 65 லிட்டரும், வாய்க்கால் பாசனத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை 400 லிட்டரும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வெயில் அதிகமுள்ள மாதங்களில் யூரியா, பொட்டாஷ் ரசாயன உரங்களை பயன்படுத்தக்கூடாது. ஆடு, மாடுகளின் எரு, மட்கிய உரம், மண்புழு, இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.
ஈரத்தன்மை (Moisture)
தென்னையில் குரும்பை கொட்டுதல் பாரம்பரிய குணம். ஒரு குலையில் 40 முதல் 50 குரும்பைகள் தோன்றினாலும் குறைந்தளவே தேங்காய்களாக மாறுகின்றன. வெயில், பாசனப் பற்றாக்குறை, நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறையும் குரும்பை உதிர காரணம். வேர் மூலம் தென்னை ஊட்டச்சத்து டானிக் செலுத்தி சரிசெய்யலாம். இந்த மருந்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ், போரான், மாலிப்டினம் ஊட்டச்சத்துகள் உள்ளன.
மரத்திலிருந்து 2 முதல் 3 அடி தள்ளி நான்கு அங்குல ஆழத்தின் கீழ் உறிஞ்சும் வேர்கள் அமைந்திருக்கும். இந்த பகுதியில் பென்சில் கனமுள்ள மஞ்சள் நிற வேரை தேர்வு செய்து நுனியை மட்டும் சாய்வாக சீவ வேண்டும்.
டானிக் உள்ள பையின் அடி வரை வேரை நுழைத்து பையை நுாலால் கட்டிவிட வேண்டும். மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும். 6 மாதத்திற்கு ஒருமுறை 200 மில்லி டானிக் செலுத்த வேண்டும்.
- அருண்ராஜ், மகேஸ்வரன்
தொழில்நுட்ப வல்லுனர்கள்
வேளாண் அறிவியல் மையம்
தேனி
96776 61410
மேலும் படிக்க
விவசாய இடுபொருட்களை கட்டாயமாக விற்பனை செய்தால் உரிமம் ரத்து!
Share your comments