தக்காளி குடும்பத்தைச் சேர்ந்த மணத்தக்காளி கீரை தமிழகத்தில் குறைந்த அளவில் விதை (Seed) மூலம் பயிரிடப்படுகிறது. 25 - 30 நாள் நாற்றுகளை 30க்கு 30 செ.மீ., இடைவெளியில் நட வேண்டும். நட்ட 45 நாட்களில் இலை, தண்டை கிள்ளி எடுக்கலாம்.
சத்துக்கள்
நூறு கிராம் கீரையில் 5.9 கிராம் புரதம், 1.0 கிராம் கொழுப்பு, 410 மி. கிராம் சுண்ணாம்பு, 70 மி. கிராம் பாஸ்பரஸ், 20.5 மி. கிராம் இரும்புச்சத்து மற்றும் 0.59 மி.கிராம் ரிபோபிளேவின் (வைட்டமின் பி.2), 0.90 மி. கிராம் நியாசின் (வைட்டமின் பி.3), 11 மி. கிராம், வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளன.
கோ1 மணத்தக்காளி ரகம்
கோ1 மணத்தக்காளி ரகம் அதிக மகசூல் (High Yield) தரக்கூடிய புதிய ரகம். எக்டேருக்கு 30 - 35 டன் வரை கீரை மகசூல் தரும். இதில் 0.38 சதம் ஆல்கலாய்டு, கிராமுக்கு 21.66மி. கிராம் அஸ்கார்பிக் அமிலம், கிராமுக்கு 6.10 மி. கிராம் இரும்புச்சத்து அடங்கியுள்ளன. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் சாகுபடி (Cultivation) செய்யலாம். அங்ககத் தன்மை அதிகமுள்ள வண்டல் மண் இதற்கு ஏற்றது. அடியுரமாக 10 முதல் 15 டன் மட்கிய தொழு உரமிடவேண்டும். மேலும் 50 கிலோ தழைச்சத்து (110 கிலோ யூரியா), 50 கிலோ மணிச்சத்து (313 கிலோ சூப்பர் பாஸ்பேட்), 50 கிலோ சாம்பல் சத்து (85 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷ்) அடியுரமாக பாத்திகளில் கலக்க வேண்டும்.
விதைப்பு
நேரடி விதைப்புக்கு ஒரு எக்டேருக்கு 5 கிலோ விதைகளும், நாற்று முறைக்கு இரண்டரை கிலோ விதைகளும் தேவைப்படும். விதைப்பு செய்த 3ம் நாள் நீர் பாய்ச்சி, காலநிலையைப் பொறுத்து வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும்.
விதைத்த ஒரு மாதம் கழித்து சரியான இடைவெளி விட்டு மற்ற செடிகளை பிடுங்கி விட்டால் கீரை சீராக வளரும். கீரை தான் உணவு என்பதால் மருந்து தெளிக்கக்கூடாது.
பூச்சிக் கட்டுப்பாடு
இலைகளைக் கடிக்கும் புழுக்களைப் பிடித்து அழிப்பதே சிறந்த வழி. புழுக்களும் வெட்டுப்புழுக்களும் அதிக அளவில் இருந்தால் 3 சதவீத வேப்ப எண்ணெய் (Neem Oil) பயன்படுத்தலாம்.
நோய் தாக்குதலுக்கு மான்கோசெப் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளித்த 7 - 10 நாட்கள் வரை கீரை பறிக்கக்கூடாது. விதைத்து 45 நாட்கள் கழித்து முதல் அறுவடை செய்யலாம். 15 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த அறுவடை (Harvest) செய்யலாம். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னும் 10 கிலோ தழைச்சத்து உரத்தை பாத்திகளில் கலக்க வேண்டும். 6 மாதங்கள் வரை பராமரித்தால் எக்டேருக்கு 30 - 35 டன் வரை கீரை மகசூல் கிடைக்கும்.
மாலதி, உதவி பேராசிரியர் விஜயகுமார்
ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம்
சந்தியூர், சேலம்
97877 13448
மேலும் படிக்க
விளை பொருட்களை இருப்பு வைத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பொருளீட்டு கடன் பெறலாம்
ஈரோட்டில் சூறாவளிக்காற்று மழையால் வாழைகள் சாய்ந்தன: இழப்பீடு வழங்க கோரிக்கை!
Share your comments