அனைத்து அரசுத் திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.700 கோடி செலவு செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் நிலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில், இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடும் என யூகமான தகவல்கள் வெளிந்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அதை அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
முன்னதாக, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை மாலையில் கூடி ஆலோசனை செய்தது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வெளியான அறிவிப்பு:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நடைபெற்ற போது, பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாட்டில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஏழைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார்.
சுதந்திர தின உரையில் இதுகுறித்து அவர் பேசுகையில், “ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மைக்ரோ நியூட்ரியண்ட் குறைபாடு போன்ற காரணங்களால் ஏழை குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை, அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பல்வேறு அரசுத் திட்டங்களின் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஏழைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியுடன் ஊட்டச்சத்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டார். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி என்றாலும் சரி, மதிய உணவுத் திட்டத்திற்கு வழங்கப்படும் அரிசி என்றாலும் சரி அல்லது எந்தவொரு அரசு திட்டத்தின் கீழ் அரிசி வழங்கப்பட்டாலும், அதை செறிவூட்டப்பட்டதாக கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அந்த வகையில், இந்தத் திட்டத்தை 2024ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.
தற்போது எங்கெல்லாம் செயல்படுத்தப்படுகிறது?
செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக 15 மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 மாநிலங்களில் பரிசோதனை அடிப்படையில் தலா ஒரு மாவட்டத்தில் இந்தத் திட்டம் செயல்பட உள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக, இந்த அரிசி விநியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது.
தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், தலா ஒரு மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க:
கூகுள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: மென்பொறியாளர்களே அலர்ட்!
மழைக் காலத்திற்கு ஏற்ப பாத பராமரிப்பு - நோய்களையும் தவிர்த்திடலாம்!
Share your comments