அன்புக்கு மகளும், ஆஸ்திக்கு மகனும் இருந்தால், வாழ்க்கை இனிமையாகும் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அதிலும் ஆணுக்கு நிகராக பெண்களும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால், இருபாலருக்கும் சமமான மரியாதை கிடைக்கத் தொடங்கிவிட்டது.
இருப்பினும் பெண் குழந்தைகளின் திருமணச் செலவு, பெற்றோருக்கு கூடுதல் சுமையாகிவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டமே 'சுகன்யா சம்ரிதி யோஜனா' (Sukanya Samriddhi Yojana). இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை இந்திய தபால் துறை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலர்களோ அஞ்சலகங்கள் அல்லது வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 20க்கும் மேற்பட்ட வங்கிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எவ்வளவு சேமிக்கலாம்?
இந்த சேமிப்புக் கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 250 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும்.
எத்தனை பேருக்கு சேமிக்கலாம்?
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
வருடத்திற்கு ஒருமுறையோ, மாதாம் மாதமோ சேமிக்கும் வசதி உள்ளது. 15 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்தால் போதும். 16-வது ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு நீங்கள்செலுத்திய தொகைக்கு Compound Interest கணக்கிடப்பட்டு திட்டம் முதிர்ச்சியடையும் 21-வது ஆண்டில் பெருந்தொகை வழங்கப்படும்.
எவ்வளவு கிடைக்கும்?
மாதத்திற்கு 2 ஆயிரம் வீதம் செலுத்தினால் 15 ஆண்டுகளின் உங்கள் சேமிப்பு தொகை 3லட்சத்து 60 ஆயிரமாக இருக்கும். வட்டியுடன் சேர்க்கும்போது 7 லட்சத்து 80 ஆயிரத்து 461 ரூபாயாக மாறும். இதற்கு தொடர்ந்து 6 ஆண்டுகள் Compound Interest அளித்து, 21-வது ஆண்டில் திட்டம் முதிர்ச்சியடையும்போது, முதிர்வுத்தொகையாக 11 லட்சத்து 40 ஆயிரத்து 411 ரூபாய் கிடைக்கும்.
இதுவே மாதம் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், 21 ஆண்டுகள் கழித்து முதிர்வுத்தொகையாக 17 லட்சத்து 10 ஆயிரத்து 617 ரூபாய் கிடைக்கும்.
வரி விலக்கு (Tax Deduction)
நீங்கள் செலுத்தும் தொகைக்கும், முதிர்வுத்தொகைக்கும், வட்டிக்கும் Tax Deduction Section 80cன்படி வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
கணக்கை இடமாற்றுதல்
கணக்கை வேறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் அண்மையில் 5 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம்
மாற்றம் 1
முதலீட்டாளருக்கு 18 வயது ஆன பிறகே, சேமிப்புக் கணக்கை அவர் தனியாக நிர்வகிக்க முடியும். ஏற்கனவே இந்த இலக்கு 10 ஆண்டுகளாக இருந்தது.
மாற்றம்2
100ன் மடங்காக இருந்த முதலீடு செய்யும் தொகை, தற்போது 50ன் மடங்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றம் 3
5ம் தேதிக்கு பிறகு எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து வட்டி அளிக்கப்படும்.
இந்த தேதி, பழைய முறைப்படி 10ம் தேதிக்கு பிறகு என இருந்தது. எனவே மாதாமாதம் 1 முதல் 4ம் தேதிக்குள் உங்கள் முதலீட்டைச் செலுத்தி விடுங்கள்.
மாற்றம் 4
பாதியில் செலுத்தாமல் விட்டுவிடும்பட்சத்தில், முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு சேமிப்புக்கணக்கிற்கு அளிக்கப்படும் 4 சதவீத வட்டியே இதுவரை வழங்கப்பட்டது. ஆனால் புதிய விதியின்படி, இந்த சேமிப்புத் திட்டத்திற்கு வழங்கப்படும் 8.4 சதவீத வட்டியே வழங்கப்படும்.
மாற்றம் 5
பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் உயர்கல்விக்கு கடன் பெற்றுக்கொள்ளலாம் என்பது பழைய நடைமுறை. புதிய நடைமுறையின்படி, இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள பெண் குழந்தைகளின் கல்விச் செலவுக்காக 50 சதவீதத்தொகையை கடனாகப் பெற முடியும்.
மேலும் படிக்க...
UYEGP : 5% முதலீடு செய்தால் போதும்! அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்!
PMKMY: பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
Share your comments