கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் கீழ் இயங்கும் தபால் அலுவலகங்களிலும் விவசாயிகள் மற்றும் சாமானிய பொதுமக்கள் மிகக் குறைந்த தொகையை முதலீடு செய்யக்கூடிய பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான திட்டமாக பார்க்கப்படுவது கிசான் விகாஸ் பத்திர திட்டம்.
கிசான் விகாஸ் பத்திரம் - Kisan Vikas Patra
கடந்த 1988-ம் ஆண்டு கிசான் விகாஸ் பத்ர திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இது மிகப் பிரபலமான ஒரு சேமிப்புத் திட்டமாக வளர்ந்து வந்தது. எனினும், 2011ம் ஆண்டு முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகார் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இதில் மேலும் பாதுகாப்பு அம்சங்களைப் புகுத்தி மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சேமிப்பு வரம்பு - Saving Limit
இந்த திட்டத்தில் சேமிப்பை தொடங்க குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலுத்தலாம். அதிகபட்சத் தொகைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்பட வில்லை. இருப்பினும் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்கள், தங்களின் பான் கார்டு தொடர்பான விவரங்களை அளிக்கவேண்டும் அதேபோல் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை (Salary Certificate) கொடுக்க வேண்டும்.
10 ஆண்டுகளில் இரட்டிப்பு லாபம் - Double in Return
இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து நீங்கள் செலுத்தும் தொகை இரட்டிப்படைகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு ஆண்டுக்கு 6.9 சதவீதம் வட்டி வீதம் தற்போது அளிக்கப்படுகிறது.
KVP - பத்ரா வகைகள்
இந்த திட்டத்தின் மூலம், நீங்கள் ஒற்றை கணக்கு, இரட்டைக் கணக்கு, கூட்டுக் கணக்கு ஆகியவற்றை திறக்கலாம். இந்த கணக்கில் கீழ் மற்றொருவரையும் பரிந்துரை (Nominee) செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடனும் பெறமுடியும்
விண்ணப்பிப்பது எப்படி? - How to Apply
கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று ஆதார் உள்ளிட்ட தேவையான அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம்.
நடைமுறைகள் - Procedures
-
விண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில், மரணமடையும் பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட உறவினர் அல்லது மற்றவர்கள் (Nominee), முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கான வசதியும் உண்டு.
-
முதலீட்டாளர் விரும்பினால், இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
-
ஒருவேளை முன்கூட்டியேப் பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு இந்தத், திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். பணத்தைப் பெறும் நாள்வரை வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
Share your comments