சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரானோ (Corona) இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் விளைவாக, ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் (Bharath Biotech) நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின் (Covexin)' தடுப்பூசியை உருவாக்கியது. அதேபோல இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு (CoviShield) என்ற பெயரில் தயாரித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9-ந் தேதி உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அதன் பின், ஜனவரி 16-ந் தேதி (இன்று) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இன்று முதல் நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி (Corona vaccine) செலுத்தப்படுகிறது. இந்த மாபெரும் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இலக்கு நிர்ணயம்:
“இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் குறைவான காலக்கட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகளும் மற்ற நாடுகளை விட விலை மலிவானவை. இந்தியாவில் நடைபெறுவது உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டமாகும். முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு தடுப்பூசி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், இன்று தான் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைந்திருப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி பயனளிக்கும் என்றும் தெரிவித்தார். டெல்லியில் 75 மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி:
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி (CM Palanisamy) தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்கு (Sendhil) போடப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படும் எனவும் முதல் தடுப்பூசிக்கு பிறகு 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பல்வேறு ஆய்வுகளுக்கு பின் தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், மக்கள் அனைவரும் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். நானும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வேன்” என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட சீரம் நிறுவனர்
‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்த சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவாலா, தனது நிறுவத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இன்று தனது உடலில் செலுத்திக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெற இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு பாராட்டு
கொரோனா தடுப்பூசி போடும் இந்த மைல்கல் திட்டத்தை அறிமுகம் செய்தமைக்காக இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகம் தரப்பில் டுவிட்டர் பதிவில் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் எனவும் எனவும் அந்த டுவிட் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பசு சாணத்தில் காதி இயற்கை டிஸ்டம்பர், எமல்ஷன் பெயிண்ட்! நாளை அறிமுகப்படுத்துகிறார் நிதின் கட்கரி
Share your comments