மீன்வளத் துறை சார்பில், மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர்பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, துவக்கி வைத்தார். இதன் தொடக்கமாக, ஏழு மீனவர்களுக்கு, படகுகளுக்கான பதிவு சான்றிதழ்களை (Register certificate) வழங்கினார்.
ஆழ்கடல் படகுக்கு 70% மானியம்:
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன், 2,000 இழுவலை படகுகளுக்கு பதிலாக, புதிதாக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டும் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த, 2017 - 18 ஆம் ஆண்டில், முதல்கட்டமாக, 500 இழுவலை படகுகளை, ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக (Deep sea fishing boat) மாற்ற, மத்திய அரசு பங்குத் தொகையுடன், தமிழக அரசு, 286 கோடி ரூபாயை ஒதுக்கியது. படகின் விலை, 80 லட்சம் ரூபாய். இதில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை மாநில அரசும் மானியமாக (Subsidy) வழங்குகின்றன. பயனாளியர், 10 சதவீதம் செலுத்த வேண்டும்; 20 சதவீதம் வங்கி கடனுதவி (Bank Loan) வழங்கப்படுகிறது.
முத்தரப்பு ஒப்பந்தம்
படகு கட்டும் நிறுவனம், மீன்வளத்துறை மற்றும் மீனவர்களை உள்ளடக்கி, முத்தரப்பு ஒப்பந்தம் (Tripartite agreement) போடப்பட்டுள்ளது. அதன்படி, 95 ஆழ்கடல் படகுகளுக்கு பணியாணை வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை, 24 பயனாளியருக்கு, ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம், புதுச்சேரி, துாத்துக்குடி படகு கட்டும் தளங்களில் (Boat construction sites) இருந்து, 12 கோடி ரூபாய் செலவில், 15 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் தொடங்கி வைத்தார்
ஆழ்கடல் படகுகள் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகின்றன. இதில், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான எட்டு படகுகளை, புதுச்சேரி சிகாஜன் படகு கட்டும் நிறுவன தளத்தில் இருந்து, முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) வீடியோ கான்பரன்ஸ் (Video Conference) வழியே, கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைமை செயலகத்தில், ஏழு மீனவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான, பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் சாவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலர் சண்முகம், மீன்வளத்துறை செயலர் கோபால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய விருது
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் (Tamil Nadu Fish Development Corporation) மூன்று ஆண்டு செயல்பாடுகள் அடிப்படையில், 'மீன்வளத் துறையில் அரசு சார்ந்த நிறுவனங்களில் சிறந்த செயல்பாடு' என்ற பிரிவின் கீழ், உரிய கருத்து, மத்திய அரசின் மீன்வளத் துறைக்கு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய முகமை வழியே சமர்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம், சிறந்த நிறுவனமாக, மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. நவ., 21ல், டில்லியில் நடந்த விழாவில், விருது (Award) வழங்கப்பட்டது. இவ்விருதை, அமைச்சர் ஜெயகுமார் (Jeyakumar) மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வீட்டுத் தோட்ட இடுபொருட்களை மானிய விலையில் வாங்க ஆதார் கட்டாயம்
Share your comments