விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் மானிய விலையில் ட்ரோன்கள் வழங்கும் அரசின் திட்டம் குறித்தும், ட்ரோன்களை பெறுவதில் உள்ள சலுகை விவரங்கள் குறித்தும் வேளாண் ஆலோசகர் அக்ரி சந்திரசேகரன் நமது கிரிஷி ஜாக்ரான் இணையதளத்துடன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு:-
பொதுவாக மானாவாரியில் அதிகளவாக மக்காசோளம் பயறு வகை, பருத்தி ஆகியன சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது குறிப்பாக படைப்புழுவின் தாக்கம் எல்லா இடங்களிலும் இந்த கடுமையான வறட்சியிலும் காணப்படுகின்றன.
பூச்சி மருந்து தெளிக்காமல் இந்த காலத்தில் விவசாயம் செய்ய முடியாது என்கிற நிலை உருவாகிவிட்டது. முன்பெல்லாம் கிராமங்களில் பூச்சி மருந்து தெளிக்க எளிதாக கூலி ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஆட்கள் சரிவர கிடைப்பதில்லை, இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ட்ரோன்கள் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
தமிழக அரசு வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாய கருவிகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் பயிர் பாதுகாப்பு உரம் தெளிக்க பயன்படும் ட்ரோன்களும் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மானியத்தில் ட்ரோன் வழங்கும் திட்டத்தின் படி, சிறு/ குறு ஆதி திராவிட விவசாயிகளுக்கு ( பெண்) 50% மானியம் அல்லது அதிகப்பட்சமாக 5 லட்சம் ரூபாயும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40% மானியம் அல்லது அதிகப்பட்சமாக 4 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகின்றன.
வேறு ஏதேனும் சிறப்பு சலுகை உண்டா?
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு/ குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் மாநில அரசு நிதியிலிருந்து, வழங்கப்படுகின்றன.
- ட்ரோன் வாங்கிட வங்கி கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
- வட்டார/ கிராம அளவிலான வேளாண் வாடகை மையங்களில் தேவைப்படும் கருவிகளுடன் சேர்த்து ட்ரோன் கருவிகளையும் மானியத்தில் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- வேளாண் பட்டதாரிகளுக்கு ட்ரோன்களின் அடிப்படை விலையில் 50% அல்லது 5 லட்சம் இவற்றில் எது குறைவானத்தொகையோ அது மானியமாக வழங்கப்படுகின்றன.
ட்ரோன் இயக்குவதற்கு லைசென்ஸ் தேவையா?
ஆம் கண்டிப்பாக. ட்ரோன்களை இயக்குவதற்கு உரிய பயிற்சியைப் பெற்று அதற்கான உரிமம் பெற்று நீங்கள் இயக்கலாம் அல்லது ஏற்கனவே உரிமம் வைத்திருக்கும் நபர்களை கொண்டு நீங்கள் மருந்து தெளிக்கலாம். பயிற்சி இல்லாமல் இயக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்க.
ட்ரோன் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்திலுள்ள இரண்டு ட்ரோன் நிறுவனங்களின் 2 மாடல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் விருப்பமுள்ளவற்றை விவசாயிகள் தேர்வு செய்து கொள்ளலாம். ட்ரோன் வாங்க விரும்பும் விவசாயிகள் (https://mts.aed.tn.gov.in/evaadagai/ ) என்ற இனணயதளத்தின் மூலம் பதிவு செய்து, மானியத்தில் பதிவு முன்னுரிமையின் அடிப்படையில் ட்ரோன்களை வாங்கிடலாம்.
மேலும் அரசின் மானிய விலையில் ட்ரோன் வாங்குவது தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 94435 70289.
இதையும் காண்க:
இந்த 16 மாவட்டத்தில் ஆட்டம் காட்டும் அடைமழை- மக்களே ப்ளீஸ் கவனம்
பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாகியுள்ளது- தீர்மானம் மீது முதல்வர் உரை
Share your comments