கருத்தடை சிகிச்சைக்கு பின்னும் குழந்தை பெற்ற தாய்க்கு, 3 லட்சம் ரூபாயும், குழந்தையின் 21 வயது வரை, ஆண்டுதோறும் 1.20 லட்சம் ரூபாய் வழங்கவும், சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தமிழ் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார். இவரது மனைவி கணவர். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2-வது குழந்தை பெற்ற பின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில், 2014ல் தனம் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் தைராய்டு பிரச்னைக்காக, அதே அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, தனம் மீண்டும் கருவுற்றிருப்பது தெரிந்தது. 2017 செப்டம்பரில், மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றார்.
இழப்பீடு கேட்டு வழக்கு
இதையடுத்து, அரசின் சலுகைகளை இழந்ததாகவும், குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு, திருமணத்துக்கான செலவுகளை, தன்னால் செய்ய முடியாது என்பதாலும், மருத்துவரின் அலட்சியத்தால் கருத்தைடை சிகிச்சை நடந்ததால், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, உயர் நீதிமன்றத்தில் தனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:கருத்தடை சிகிச்சையின் போது, மீண்டும் கருத்தரிப்பு இருக்காது என மருத்துவர்கள் , மனுதாரரை நம்ப வைத்துள்ளனர்.ஆனால் 'சிகிச்சைக்கு பின்னும் கருவுற்று, குழந்தை பெற்றதால், சிகிச்சை தோல்வி அடைந்ததாகவேக் கருதமுடியும். மூன்றாவதுக் குழந்தையைப் பொறுத்தவரை, பெற்றோருக்கு வேண்டாதக் குழந்தை என்றாகி விட்டால், அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கான செலவை, அரசு தான் ஏற்க வேண்டும்.
எனவே, மனுதாரருக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஐந்து வயதை எட்டிய உடன், மூன்றாவது குழந்தையை, அரசு அல்லது தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும். அந்த குழந்தைக்கு இலவசமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி கட்டணம், புத்தகம், சீருடை உள்ளிட்ட செலவுகளை, அரசே ஏற்க வேண்டும்.
வருடத்திற்கு ரூ.1.20 லட்சம்
பட்டப்படிப்பு முடிக்கும் வரை அல்லது 21 வயது நிரம்பும் வரை, ஆண்டுதோறும் 1.20 லட்சம் வழங்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கான அரசின் அனைத்துத் திட்டங்களின் பலன்களையும், மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிப்பு...
Share your comments