எதிர்காலத்திற்காகச் சிக்கனத்தைக் கையாண்டுக் காசு சேர்ப்பது முக்கியம் என்றால், அதைவிட முக்கியம் ஆரோக்கியம். ஏனெனில் சுவர் இன்றி சித்திரம் வரைய முடியாதே. ஆக வருங்காலத்தில் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ்வது என்பது கடினமான விஷயங்களில் ஒன்றாகிவிடும். அதை சுலபமாக்குவதற்கு இந்த 6 வழிகளைக் கடைப்பிடிக்க முன்வரவேண்டும்.
மனசுதான் காரணம்
நம் மனதை இலேசாக வைத்துக்கொள்வதே சிறந்தது. ஏனெனில் மனசுதான் எல்லாவற்றுக்கும் காரணம். மனதைப் பொறுத்துத்தான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம்.
உடல் உறுப்புகளை வலிமைப் படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும். புத்துணர்வும் கிடைக்கும். ஆரோக்கிய உணவு, சுவாசம், தோற்ற அமைப்பு போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல், அளவான, ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
தியானம்
பிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக்கலாமே.
காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையை கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங்கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.
உணவுக்கு மதிப்பு
உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டி.வி. பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல. தரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினாலே போதும். அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு உடலுக்குப் பலம் சேர்க்கும். உண்ணும்போது கறிவேப்பிலை, மிளகு, தக்காளி போன்றவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.
நேசித்தல்
நம்மை நாமே விரும்பவும், அக்கறையோடு நேசிக்கவும் பழக வேண்டும். மற்றவர்களிடம் அன்பு செலுத்தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும், மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம், மன சோர்வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.
உடற்பயிற்சி
உடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால், உடல் உழைப்பை நாமே உருவாக்கலாம். காலை, மாலை உடற்பயிற்சி செய்வது, கீழே உட்கார்ந்து சாப்பிடுவது, அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்வது, வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது, வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என விடுமுறை நாட்களை ஒதுக்கி உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.
உணவுப் பழக்கம்
காலை உணவைத் தவிர்த்தல், துரித உணவுகளைச் சாப்பிடுதல், சுவைக்கு அடிமையாதல், அடிக்கடி விரதம் இருத்தல், சுகாதாரமற்ற உணவை உட் கொள்ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம். பசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிப்பது நல்லது. அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட், பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில், டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.
மேலும் படிக்க...
Share your comments