இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 163 நாட்களில் (ஐந்து மாதங்கள் மற்றும் 13 நாட்கள்) ஒரே நாளில் பதிவாகிய அதிகப்பட்ச தொற்றாகும்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் உள்ளாகிய நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,435 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23,091 ஆக அதிகரித்துள்ளது என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது கடந்த 163 நாட்களில் ஒரே நாளில் பதிவாகிய அதிகப்பட்ச தொற்றாகும். முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி 4,777 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. புதிய தொற்றுகளின் எண்ணிக்கைப்படி, ஓட்டுமொத்தமாக இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 4.47 கோடியாக (4,47,33,719) உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,916 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன; சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவரும், கேரளாவில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தேசிய அளவில் COVID-19 தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.76 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது. தினசரி தொற்று விகிதம் 3.38 சதவீதமாகவும், வாராந்திர தொற்று உறுதியாகும் விகிதம் 2.79 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து மொத்தமாக மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.
அமைச்சகத்தின் இணையதளத்தின் படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் மீண்டும் பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் எதிரொலியை அடுத்து வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதி நாடு தழுவிய போலி பாதுகாப்பு சுகாதார ஒத்திகை நடைப்பெறும் எனவும் ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
ஷெனாய் நகரில் இனி கூட்டம் அள்ளும்.. புத்துயிர் பெற்ற இந்த பூங்காவினால் தான்!
Share your comments