மாறிவரும் பருவநிலையும், உணவு பழக்கவழக்கமும் மனிதனின் ஆரோக்கியத்திற்கும், புற அழகிற்கும் சவாலாகவே இருக்கிறது. தோல்களில் உண்டாகும் நோய் தொற்று, தேமல் போன்றவை நம்மை அதிக மன உளைச்சலுக்கு அளக்கிவிடும். இயற்கை அளித்துள்ள அளப்பரிய கொடையில் எல்லா விதமான நோய்களும் தீர்வு இருக்கிறது.
தேமல் என்பது ஒரு வகையான சரும நோய், தேமல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. சந்தைகளில் விற்கப்படும் இரசாயனம் கலந்த சோப்புகள், க்ரீம்கள், முக புச்சுகள் போன்றவற்றை பயன் படுத்துவதும் ஒரு காரணம். சோப்பை தேர்ந்தெடுக்கும் போது நமது சருமத்தை கருத்தில் கொள்ள வேண்டும். சோப்பை தவிர்த்து இயற்கை அளித்த கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோரைகிழங்கு, குப்பைமேனி ,வெட்டி வேர், பூலாங்கிழங்கு, கஸ்துரி மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தி வீட்டிலேயே குளியல் பொடியை தயாரித்து பயன் படுத்தினால் சரும நோய்களில் இருந்து நாம் நமது சருமத்தை பாதுகாக்கலாம்.
மூலிகைகளின் சிறப்பு என்னவெனில் பக்கவிளைவுகள் எதுவும் தராது. இன்று பெரும்பாலானோர் மூலிகைகள், இயற்கை மருத்துவத்தை நாடுவதற்கு காரணமும் இதுதான். தேமல் பிரச்சனைக்கு இங்கு எளிய தீர்வு வழங்க பட்டுள்ளது. இங்கே குறிப்பிட்ட பொருட்களை வீட்டின் அருகிலேயோ அல்லது நாட்டு மருத்து கடைகளில் கிடைக்க கூடியது.
பூவரச காய்கள்
பூவரச மரத்தின் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வர தேமல் அகலும்.
அருகம்புல்
எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்புற பயன்பாட்டிற்கும் ஏற்றது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி போன்றவற்றை அம்மியில் வைத்து நமக்கு அரைத்து தேமல் மீது பூசி வர விரைவாக குணமாகும்.
நாயுருவி இலை
நாயுருவி இலையை பொறுத்த வரை அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் சிறந்த மருந்தாகும். இதன் சாறை தொடர்ந்து தடவி வந்தால் தேமல், படை போன்றவை குணமாகும்.
ஆரஞ்சு தோல்
கமலா ஆரஞ்சு தோல் சருமத்திற்கு புத்துணர்ச்சி தருவதுடன் நோய் தொற்றிலிருந்து விடுதலை தர கூடியது. இதன் தோல்களை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரலாம்.இத்துடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் வாக்கு விரைவில் மறையும்.
பூண்டு
வீட்டில் இருக்க கூடிய ஒன்று, இதுவும் தேமலுக்கான ஒரு சிறந்த மருந்தாக கூறப்படுகிறது,உடம்பில் எவ்வளவு தேமல் இருந்தாலும் எளிதில் சென்று விடும். வெள்ளைப்பூண்டுடன் வெற்றிலை சேர்த்து நன்கு அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கஸ்துரி மஞ்சள்
கஸ்துரி மஞ்சள் வாசனை தருவதுடன் நல்ல கிருமி நாசினி. இதை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும் .
தொட்டாற்சுருங்கி
தொட்டாற்சுருங்கி நாம் இருக்கும் இடத்தை சுற்றி அதிக அளவில் காணப்படும். இதன் இலைகளை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.
குப்பை மேனி
குப்பை மேனி இலையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேமல் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
துளசி இலை
துளசி இலையை சுக்குடன் சேர்த்து அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் குறையும். சருமம் வெகு விரைவிலேயே இயல்பு நிலையை அடையும்.
கருங்சீரகம்
கருங்சீரகம் சர்வ ரோக நிவாரிணி எனலாம். இதனை நம் உட்கொள்ளலாம், வெளி புச்சாகவும் பயன் படுத்தலாம். இதனை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையின் சாற்றினை கை, மார்பு, தொடைப் பகுதிகளில் அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும்
எலுமிச்சை தோல்
எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments