பிப்ரவரி 1-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது.
குறையும் கொரோனா பாதிப்பு (Decreased corona exposure)
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4,601 ஆக குறைந்துள்ளது. உயிரிழப்பும் கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. தற்போது கொரோனா பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 ஆக உள்ளது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்படும் பணி கடந்த 16-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இதுதொடர்பாக இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி (Vaccination for field workers)
தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கும் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். அந்த வகையில் போலீசார், வருவாய்த்துறை, பத்திரிகை துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
மூத்த குடிமக்களுக்கும் வருகிற 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களும் தங்களது விவரங்களை முன்பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இலக்கு எட்டவில்லை (The goal was not reached)
இதற்காக தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கோவிஷீல்டு (Covishield), கோவேக்சின் (Covaxin ) தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை பொறுத்தவரை எதிர்பார்த்த இலக்குகளை எட்ட இயலாததால் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 தனியார் மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களும் இலவசமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்வது எந்த வகையிலும் கட்டாயம் அல்ல. அவரவர் விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments